இந்த ஞாயிற்றுக்கிழமை, டாக்டர் எம் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பக்காத்தான் ஹராப்பான் மாநாட்டில், ஹராப்பானின் அதிகாரப்பூர்வப் பிரதமர் வேட்பாளராக டாக்டர் மகாதீர் அறிவிக்கப்படவுள்ளார்.

எனினும், டாக்டர் மகாதிர் ‘தற்காலிக பிரதமர்’ என்று குறிப்பிடப்பட வேண்டுமா, இல்லையா என்பது பற்றிய உடன்பாடு ஏதும் இல்லை என்று மலேசியாகினிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தற்காலிக பிரதமர்’ என்று அறிவிக்கப்பட்டால், தாங்கள் எதிர்ப்பார்ப்பதை அடையமுடியாமல் போகலாம் என்று ஹராப்பான் கூட்டணியில் சில கட்சியில் அஞ்சுவதாகத் தெரிகிறது.

உதாரணமாக, வரவிருக்கும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், நிலையான ஓர் அரசாங்கத்தை நிறுவ, ஹராப்பான் கூட்டணியால் இயலாது என்பதுபோலான ஒரு பார்வையை அது உருவாக்கும்.

பிரதமர் வேட்பாளர் பதவி தற்காலிகமானது என்பதனை ஹராப்பான் தலைவர்கள் ஏற்றுக்கொண்டாலும் கூட, அவ்வாறு அறிவிக்கப்பட்டால் பொது மக்களின் நம்பிக்கையை இழக்கக்கூடும்.

அதேசமயம், ‘தற்காலிக பிரதமர்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைபாட்டை பிகேஆர் கொண்டுள்ளதாக சில ஆதாரங்கள் கூறுகின்றன.

அக்கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி, மகாதீரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதை இன்னும் பரிசீலித்து வருவதாக, பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும், எதிர்வரும் வியாழக்கிழமை, பெர்சத்து தலைமையகத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கு முன்னதாக அவர்கள் தங்கள் முடிவைத் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

பிகேஆர்-ரின் நிலைமையைப் புரிந்துகொள்ள முடிகிறது, மகாதிர் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில், அவருக்கு எதிரான சீர்திருத்த இயக்கத்தின் வாயிலாகக் கட்சியின் அஸ்திவாரம் வேரூன்றியது. அதுமட்டுமின்றி, கட்சி எப்போதுமே பிரதமர் வேட்பாளராக அன்வார் இப்ராஹிமையே முன்மொழிந்து வந்துள்ளது.

கடந்த டிசம்பர் தொடக்கத்தில், ஹராப்பானின் முன்னிலை தலைவர்கள், மகாதீரைப் பிரதமர் வேட்பாளராகவும் வான் அஷிசாவைத் துணைப் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்க ஒப்புக்கொண்டனர்.

இதனைப் பிகேஆர் சில நிபந்தனைகளோடு ஏற்றுக்கொண்டது, அவற்றுள் , ஹராப்பான் அரசாங்கம் அன்வாரை விடுதலை செய்யும் முயற்சியைத் தொடர வேண்டும், அவரைப் பிரதமராக நியமிக்க வேண்டும் என்பனவும் அடங்கும்.

மகாதீரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு ஒரு முக்கியக் காரணம், மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பெறுவதற்கே, இருப்பினும், மகாதிரைப் பிரதான எதிரியாக பார்த்த ஒருசில ஆதரவாளர்களின் ஆதரவை இதனால் இழக்கவும் நேரிடும்.

இருப்பினும், ஷா ஆலாமில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் முக்கிய அம்சம், இரண்டு உயர் பதவிகளை – பிரதமர் , துணைப் பிரதமர் – அறிவிப்பதாகும்.

மேலும், 14 -வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, கூட்டணியின் கொள்கைகள் குறித்து விவாதிக்கவும் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக என சில ஆதாரங்கள் கூறுகின்றன.