எதிரணிக்கு வந்த பின்னர் மகாதிர் முகமட்டுக்கு எதிராகப் போலீஸ் புகார்கள் செய்யப்படுவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அப்புகார்கள் பலவகையானவை.
இன்று, கூட்டரசுப் பிரதேச அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் ரஸ்லான் முகம்மட் ரபி இன்னொரு புகாரை மகாதிருக்கு எதிராகச் செய்துள்ளார்.
இன்று செய்யப்பட்ட போலீஸ் புகாரில் மகாதிர் ஜனநாயகத்திற்கு முரணான வழிகளில் பிரதமர் நஜிப்பை வீழ்த்துவதற்கு மலேசியர்களை தூண்டிவிடுகிறார் என்பது புகார். போலீஸ் இதை விசாரிக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தியுள்ளார்.
பல ஊடக அறிக்கைகளை நன்கு ஆய்ந்த பின்னர் பிரதமர் நஜிப்பை வீழ்த்துவதற்கான மகாதிரின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானதாக இருப்பதைக் கண்டோம், அதை நம்புகிறோம் என்று முகமட் ராஸ்லான் அவரது புகாரில் கூறியுள்ளார்.
டாங் வாங்கி மாவட்ட போலீஸ் நிலையத்தில் இப்புகாரை செய்த ரஸ்லான், மகாதிரின் நடவடிக்கைகள் நாட்டின் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று கூறிக்கொண்டார்.
ஆனால், அந்தப் போலிஸ் புகாரில் நஜிப்பை வீழ்த்துவதற்காக மகாதிர் மேற்கொண்ட ‘சட்டவிரோதமான’ நடவடிக்கைகள் யாவை என்பதோ எந்த ஊடகச் செய்தியின் அடிப்படையில் புகார் செய்யப்படுகிறது என்பதோ குறிப்பிடப்படவில்லை.
பின்னர் தொடர்பு கொண்ட போது, டாங் வாங்கி போலீஸ் தலைமை அதிகாரி ஷகாருடின் அப்துல்லா புகார் செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார்.
இப்புகார் எந்த சட்டவிதியின்கீழ் விசாரிக்கபடும் என்பது தெளிவாக்கப்படவில்லை.