கடந்த சனிக்கிழமை நடந்த, பெரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டம், கட்சியின் சட்டவிதிகளைப் பின்பற்றவில்லை என்பதால், அதனை முழுமையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென ஆர்ஓஎஸ்-ஐ பெர்சத்து உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.
தெமெர்லோ தொகுதி தலைவர், அமெருஸ் சே ஓன், அந்த ஆண்டுப் பொதுக் கூட்டம் தனிநபர் நலன்களைப் பாதுகாக்கப் போராடியதே ஒழிய, கட்சியின் பிரச்சனைகளைத் தீர்க்க தவறிவிட்டது என குற்றம் சாட்டியுள்ளார்.
“ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்கான பிரதிநிதிகள் தேர்வு, கட்சி விதிமுறைகளுக்கு ஏற்ப நடக்கவில்லை, அதற்கான கூட்டமும் நடைபெறவில்லை. இளைஞர் (அர்மாடா) , மகளிர் (ஶ்ரீகாண்டி) பிரிவுகளுக்கான கூட்டமும் நடைபெறவில்லை.
“நாங்கள் ஏமாற்றப்படுவதாக உணர்கிறோம். ஆக, ஆர்ஓஎஸ் முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று இன்று புத்ரா ஜெயா ஆர்ஓஎஸ்-இல் புகார் அளித்தபின், பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசினார்.
ஆர்ஓஎஸ் எச்சரிக்கை விடுத்த பின்னர், பெர்சத்து தனது முதல் ஆண்டு பொதுக் கூட்டத்தைக் கடந்த சனிக்கிழமை, ஷா ஆலாமில் நடத்தியது. அக்கூட்டத்தில் 137 தொகுதிகளிலிருந்து, 941 பேராளர்கள் கலந்துகொண்டனர்.
பெர்சத்து, குறிப்பிட்ட சில தலைவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாகவும், பேராளர்களுக்குக் கருத்து கூறும் உரிமையைக் கொடுப்பதில்லை என்றும் அமெருஸ் சொன்னார்.
“கட்சி தோற்றுவிக்கப்பட்டதற்கான உண்மையான நோக்கம் அங்கு இல்லை. கட்சியின் உள் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை, மாறாக தனிநபர்களின் நலன்களுக்காக மட்டுமே போராட வேண்டியுள்ளது,” என்று அவர் கூறினார்.
தனது சுய இலாபத்திற்காக மட்டும் போராடும் டாக்டர் மகாதீர், பெர்சத்து மற்றும் பக்காத்தான் ஹராப்பானின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அமெருஸ் வலியுறுத்தினார்.
முன்னதாக, ஆண்டு பொதுக் கூட்டம் நடத்தவில்லை, ‘அர்மாடா’ என அறியப்படும் இளைஞர் அமைப்பை அமைத்தது, கட்சி அரசியலமைப்பு விதிமுறைக்கு உட்பட்டு இல்லாத பொதுக் கூட்டத்தை ஒத்திவைத்தது என மூன்று குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி, ஆர்ஓஎஸ் பெர்சத்து கட்சிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.