பக்கத்தான் ஹரபான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கைக் கடுமையாக சாடினார்.
ஹாடி அம்னோவுடன் கைகோத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிரணி வாக்குகளைச் சிதறடிக்க முனைந்திருப்பதாகக் குற்றம்சாட்டிய முன்னாள் பிரதமர் அவரை “ஒரு துரோகி, காபிர் (சமய நம்பிக்கையற்றவர்)” எனச் சாடினார்.
“அவருக்கு (பாஸ்) பல இடங்களை இழக்கப் போவது நல்லா தெரியும் ஆனாலும், எதிரணி வாக்குகளைச் சிதறடித்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வெற்றிபெற உதவுகிறார்.
“அதுதான் அவருடைய நோக்கம். அது இஸ்லாத்துக்கு உகந்ததல்ல. அதை மலாயில் ‘துரோகம்’ என்போம்”. மகாதிர் இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் கலந்து கொண்டார்.
அவரிடம் பொதுத்தேர்தலில் பாஸ் 130 இடங்களில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது குறித்து கருத்துரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
பாஸ் இப்போது நாடாளுமன்றத்தில் 13 இடங்களை வைத்துள்ளது. 2013-இல் அது 21 நாடாளுமன்ற இடங்களில் வென்றது.
ஆனால், அதிலிருந்து பிரிந்து அமனா கட்சி அமைக்கப்பட்டதை அடுத்து அதன் இடங்கள் குறைந்து விட்டன. கடந்த வாரம் பொக்கோக் சேனா எம்பி மாபுஸ் ஒமார் கட்சியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அதன் இடங்கள் மேலும் குறைந்தன.
இதனிடையே மகாதிர், ஒரு காலத்தில் அம்னோவை “சமய நம்பிக்கையற்றவர்களின் கட்சி” என்று சாடியவர்கள்தான் பாஸும் ஹாடியும் என்றார்.
“பாஸுக்கு நஜிப் சமய நம்பிக்கையற்றவர். சமய நம்பிக்கையற்றவருடன் இணைந்து பணியாற்றுவோரும் சமய நம்பிக்கையற்றவர்களே என ஹாடி ஒரு முறை சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் அவரும் சமய நம்பிக்கையற்றவரே.
“இப்போது அவர் அம்னோவுடன் இணைந்து பணியாற்றுகிறார், முன்பு டிஏபியுடனும் சேர்ந்து பணியாற்றினார். எனவே, அவரும் சமய நம்பிக்கையற்றவரே”, என மகாதிர் சாடினார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்னோவின் வெற்றியை உறுதிப்படுத்தவே பாஸும் ஹாடியும் நஜிப்புடன் இணைந்து பணியாற்றுகின்றன என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாகவும் உள்ளது.