புதியப் பள்ளி கட்டப்படவில்லை, மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்தனர்

நேற்று பள்ளியின் புதிய தவணை தொடங்கி, பெரும்பான்மையான மாணவர்கள் தங்கள் சக நண்பர்களைச் சந்தித்தவேளையில், மலாக்கா, ஜாசின் லாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, தங்கள் பெற்றோர்களுடன்   பள்ளி நுழைவாயிலில் ஒன்றுகூடி நின்றனர்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, மெர்லிமாவ் இடைத்தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, இப்பள்ளிக்கூடத்தின் புதியக் கட்டிடத்தைக் கட்டத் தவறிய மத்திய அரசாங்கத்தின் மீது தங்கள் அதிருப்தியைக் காட்ட அவர்கள் அவ்வாறு செய்தனர்.

காலை மணி 7.30 முதல் மதியம் 3 வரை நடைபெற்ற இந்த அமைதி மறியலில், 41 மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் பள்ளியில் நுழைய மறுத்துவிட்டனர்.

இம்மறியலில் கலந்துகொண்ட, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.முருகன், கடந்த 2011-ல் நடந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, இப்பள்ளிக்கு ஒரு புதியக் கட்டிடத்தைக் கட்டி தருவதாக இந்தியச் சமூகத்திடம் பிஎன் அரசாங்கம் வாக்களித்திருந்தது என்று கூறினார்.

“பிஎன் அரசாங்கம் புதியப் பள்ளிக்காக நான்கு ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கியிருப்பதை நிரூபிக்க, உள்ளூர் பிரதிநிதி ஒருவர் எங்களிடம் அதற்கான நிலப்பட்டாவைக் காட்டினர்.

“ஆனால், நிலம் இன்னும் காலியாகவே உள்ளது, செம்பனை மரங்களும் காட்டு மரங்களும் மட்டும்தான் இருக்கின்றன,” என்று அவர் மலேசியாகினிக்குத் தெரிவித்திருந்தார்.

கல்வி துணையமைச்சர் பி. கமலநாதன், 2016-ம் ஆண்டு இங்கு வருகை மேற்கொண்டபோது, 2018-ம் கல்வி ஆண்டில், இப்பள்ளி புதிய இடத்திற்கு மாற்றப்படும் என்று உறுதியளித்ததாக முருகன் தெரிவித்தார்.

“இப்போது 2018-ம் ஆண்டு, ஆனால் ஒன்றும் செய்யப்படவில்லை,” என்று அவர் வருத்தத்துடன் கூறினார்.

புதியப் பள்ளி கட்டிடத்தின் கட்டுமானம் ஆரம்பிக்கப்படும் தேதி குறிப்பிடப்பட்ட ஓர் உறுதி கடிதத்தை, மாவட்டக் கல்வி அதிகாரியிடம் முருகன்  கேட்டுள்ளார். ஆனால், அந்தக் கடிதத்தை வெளியிடும் அதிகாரம் தனக்கில்லை என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.