முன்னாள் ஏஜி மீண்டும் கூறுகிறார், ’சாலே அபாஸ் நீக்கப்பட்டதற்கு மகாதிர் காரணமல்ல’

முன்னாள்   தலைமை   நீதிபதி  சாலே  அபாஸ்   பதவி நீக்கம்   செய்யப்பட்டதற்கு   முன்னாள்  பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்  காரணமல்ல  என்று   முன்னாள்  சட்டத்துறைத்   தலைவர்  அபு  தாலிப்   ஒத்மான்  மீண்டும்   வலியுறுத்தியுள்ளார்.

“நான்  ஏற்கனவே  கூறியுள்ளேன்,  மகாதிர்   அவரை  விலக்கினார்  என்பதோ  விலக்க  விரும்பினார்  என்பதோ   உண்மையல்ல.  மாமன்னரின்  ஆணையைத்தான்   அவர்  நிறைவேற்றினார்”,  என்று   அவர்   இன்று  கோலாலும்பூரில்   ஒரு   நேர்காணலில்    கூறினார்.

மகாதிரைத்   தற்காப்பதற்காக   இவ்வாறு  கூறவில்லை   என்றும்    அவர்   சொன்னார்.

“நான்  மகாதிரைத்   தற்காக்கவில்லை. அதுதான்  நான்  முதலிலேயே   சொன்னேன்,   நான்   கூறப்போவது   உங்களுக்குப்  பிடிக்காமல்   இருக்கலாம்  என்று,   ஆனால்   இதுதான்  உண்மை.  நான்   அரசியல்   நாடகம்  போடவில்லை,  உண்மையைத்தான்   சொல்கிறேன்”,  என்றார்.

“அவப்பேறாக,  சிலர்   அதை  வைத்து   அரசியல்   ஆடுகிறார்கள்.  1988-இல்  முடிந்துபோன   விவகாரம்  அதை  எதற்காக  மீண்டும்  கிளற  வேண்டும்?”,  என்றவர்  வினவினார்.

1988-இல்   நீதித்துறை     நெருக்கடியின்    முடிவில்    சாலே  அபாஸ்   பதவியிலிருந்து   நீக்கப்பட்டதற்கு   தாம்  பொறுப்பல்ல  என்று   நேற்று  மகாதிர்    கூறியிருந்தார்.  அவ்விவகாரத்தில்  அபு  தாலிப்  தம்  பெயரைப்   பயன்படுத்திக்கொண்டார்   என்று  அபு   தாலிப் மீது   அவர்  குறைப்பட்டுக்  கொண்டார்.

அதற்கு விளக்கமளித்த   அபு  தாலிப்,      அரசமைப்புக்கு  இணங்கவே  மகாதிரின்  பெயரைப்   பயன்படுத்திக்  கொண்டதாகக்   கூறினார்.

“தீர்ப்பாயம்   அமைக்க   அவரின்  பெயரைப்  பயன்படுத்துவது   அவசியமாயிற்று.

“சட்டத்துறைத்   தலைவர்   அலுவலகம்-  அதாவது   என்னுடைய   அலுவலகம்-  தேவையான   ஆவணங்களைத்   தயாரித்தது. அரண்மனை   தொடர்புகளைப்  பிரதமர்துறைதான்   கவனித்துக்  கொண்டது”,  என்றாரவர்.

இப்போது   மகாதிர்  அவ்விவகாரத்தில்   தம்மைத்   தற்காத்துக்கொள்ள   அவரின்  பெயரைக்  குறிப்பிடுகிறாரே  என்பதைச்   சுட்டிக்காட்டியதற்கு   சம்பவம்  நடந்து   “நீண்ட  காலமாயிற்று”,  என்றார்.

“இத்தனை   ஆண்டுகளுப்புப்  பிறகு   எல்லா  விவரங்களையும்   நினைவில்   வைத்திருக்க   முடியுமா? அவர்   ஆட்சியில்  நிகழ்ந்த  ஒரு   நிகழ்வு   இது.

“நான்  மீண்டும்  கூறிக்கொள்ள   விரும்புகிறேன்,   நான்  மகாதிரைத்   தற்காத்துப்  பேசவில்லை.  நான்  சட்டத்துறைத்   தலைவராக   இருந்தபோது  நிகழ்ந்த   எல்லாவற்றையும்    நினைவுகூற  என்னாலும்    முடியாது.   எவ்வளவோ   நடந்துள்ளது.

“(விசயம்  என்னவென்றால்)    சாலே  பதவி  நீக்கப்பட்டதற்கு  மகாதிர்   காரணமல்ல,  அதுதான்   உண்மை”,  என  அபு  தாலிப்   குறிப்பிட்டார்.