மெமாலி சம்பவத்தைப் பற்றி தெரிந்துகொள்ள அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) தேவையில்லை என்று முன்னாள் சட்டத்துறை தலைவர் அபு தாலிப் ஓத்மான் கூறுகிறார்.
போலீஸ் முன்வந்து 33 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை இம்மியும் பிசகாமல் வெளிப்படுத்த வேண்டும் என்றாரவர்.
இது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னார் நமக்கு ஏன் இந்த ஆர்சிஐ-கள்; அதெல்லாம் இப்போது வரலாறு ஆகிவிட்டது என்று அபு தாலிப் இன்று கோலாலம்பூரில் கூறினார்.
அச்சம்பவம் நடந்த 1985 ஆம் ஆண்டில் அபு தாலிப் சட்டத்துறை தலைவராக இருந்தார்.
போலீஸ்தான் இதற்கு பதில் கூற வேண்டும், ஏனென்றால் அவர்கள் அங்கு இருந்தனர். மேலும் அவர்கள்தான் நடவடிக்கை எடுத்தவர்கள் என்று அவர் கூறினார்.
“இவ்விவகாரம் பற்றி அதிகம் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால், அது போலீஸ்தான். ஏன் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) இது பற்றி இவ்வளவு மௌனமாக இருக்கிறார்? அவர்கள் முன்வந்து உண்மையைச் சொல்ல வேண்டும்.
“அன்றைய தினம் தளத்தில் என்ன நடந்தது என்பதை ஏன் போலீஸ் முன்வந்து சொல்லவில்லை? அவர்களுக்கு முழு கதையும் தெரியும்.”
இச்சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் நீதியின்முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொண்ட அபு தாலிப், இவ்விவகாரத்தின் மீது புலன்விசாரணை மேற்கொள்வதற்கு போலீஸ் தயாராக வேண்டும் என்றார்.
“அவர்கள் நிலைமையைக் கையாண்டனர். ஏன் அதை இப்போது அரசியலாக்க வேண்டும் […] நமக்கு நாட்டில் அமைதி வேண்டும். நமக்கு சட்ட ஒழுங்கு இருக்கிறது, நாம் அனைவரும் சட்டத்தின்முன் சமமானவர்கள்”, என்று அபு தாலிப் மேலும் கூறினார்.
மெமாலி சம்பவம் குறித்து ஓர் ஆர்சிஐ அமைக்கப்படும் சாத்தியத்தை அரசாங்கம் நிராகரிக்கவில்லை என்று பிரதமர் நஜிப் ரசாக் கடந்த ஆண்டில் கூறியிருந்தார்.
பாஸ் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஓர் ஆர்சிஐ அமைக்க வேண்டும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கெடா, மெமாலில் நடந்த இச்சம்பவத்தில் போலீஸ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 14 கிராம மக்களும் 4 போலீஸ் அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.