சர்ச்சைக்குரிய இருமொழித் திட்டம் (டிஎல்பி), திட்டமிட்டபடி தொடரும் எனக் கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
தற்போது இருமொழித் திட்டம் அமலில் இருக்கும் 1,215 பள்ளிகளிலும், அடுத்த வாரம் தொடங்கி, வகுப்புகள் தொடரும் எனக் கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, இவ்வாண்டு தொடக்கம் கூடுதலாக இன்னும் 88 பள்ளிகளில் இத்திட்டம் அமலாக்கம் செய்யப்படும். ஆக, 2018 தொடக்கம் நாட்டில் 1,303 பள்ளிகளில் இருமொழித் திட்டம் நடப்பில் இருக்கும்.
இதற்கிடையே, இத்திட்டம் செயலாக்கம் காணவுள்ள புதிய 88 பள்ளிகளின் விவரங்கள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் எனத் துணைக் கல்வி அமைச்சர் சோங் சின் வூன் தெரிவித்துள்ளதாக மலாய் மெயில் ஆன்லைன் கூறியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும்முன், எந்தவொரு ஊகங்களையும் செய்ய வேண்டாம் என, தற்போது இத்திட்டத்தின் கீழ் பயிலும் பிள்ளைகளின் பெற்றோரை அவர் கேட்டுக்கொண்டார்.
“அமைதியாக இருங்கள், டி.எல்.பி. திட்டத்தின் வழி, நமது மாணவர்களின் ஆங்கிலத் திறமைகளை மேம்படுத்துவதற்கான எங்கள் முயற்சியை நாங்கள் தொடர்வோம்,” என்று அவர் கூறினார்.
2018-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 88 புதியப் பள்ளிகளில், ஆண்டு 1 மற்றும் படிவம் ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படுவர். ஜொகூர், திரெங்கானு, கிளாந்தான், கெடா மாநிலங்களில் எதிர்வரும் ஜனவரி 7-ம் தேதியும், மற்ற மாநிலப் பள்ளிகளில் ஜனவரி 8-ம் தேதியும் இவ்வகுப்புகள் தொடங்கும் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வகுப்புகள் சீராக செயல்படுவதை உறுதிப்படுத்த, அனைத்து டிஎல்பி பள்ளிகளும் அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென அமைச்சு ஆலோசனையும் வழங்கியுள்ளது. – பெர்னாமா