பி.எஸ்.எம். : உலு லங்காட்டில் ஷுரைடாவைக் களமிறக்குவது, பிகேஆருக்கு நல்லதல்ல

அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர், ஷுரைடா கமாரூடினை உலு லங்காட் தொகுதியில் களமிறக்குவது பிகேஆருக்கு நல்லதல்ல என்று அத்தொகுதியின் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

“உலு லங்காட்டில் ஷுரைடாவைக் களமிறக்குவது, இன்னும் சிக்கல்களை உண்டாக்கும், ஏனெனில் பிகேஆர் இரண்டாகப் பிரிந்துள்ளது. அவர் ஒரு பிரபலமான நபரும் இல்லை, மேலும் பிகேஆருக்கு அங்கு தேர்தல் இயந்திரங்கள் கூட இல்லை, அது பாஸ்-இன் இயந்திரத்தையே நம்பியுள்ளது.

“ஏற்கனவே அது அமானாவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால், அமானாவும் அவ்விசயத்தில் வருத்தமடைதுள்ளது. ஆக, நாங்கள் வெற்றி பெற ஒரு சிறந்த வாய்ப்பு அங்கு உள்ளது,” என்று, முதல் முறையாக அத்தொகுதியில் போட்டியிடவுள்ள எஸ்.அருட்செல்வன் தெரிவித்தார்.

2008 முதல், பாஸ் கட்சியைச் சேர்ந்த சே ரொஸ்லி சே மாட் அத்தொகுதியின் எம்பி-ஆக இருந்து வருகிறார். பாஸ் இரண்டாக உடைந்து, அமானாவும் பக்காத்தான் ஹராப்பானும் உருவானபின்பு, பாஸ்-க்குச் சொந்தமான அத்தொகுதி அமானாவுக்கு ஒதுக்கப்பட்டது.

உலு லங்காட்டில், காஜாங், செமிஞ்சே, டுசுன் துவா என 3 சட்டமன்றங்கள் உள்ளன. அவற்றை முறையே, டாக்டர் வான் அஷிசா (பிகேஆர்), ஜோஹான் அஸிஸ் (அம்னோ), ரசாலி ஹசான் (பாஸ்) ஆகியோர் பிரதிநிதிக்கின்றனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஷா ஆலாம் மற்றும் உலு லங்காட் நாடாளுமன்றத் தொகுதிகளில், கோம்பாக் எம்பி அஸ்மின் அலியும் அம்பாங் எம்பி ஷுரைடாவும் போட்டியிடவுள்ளதாக பத்திரிக்கை ஒன்று இன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இருப்பினும், ஷா ஆலாம் எம்பி அத்தொகுதியில் அஸ்மின் போட்டியிடவுள்ளார் எனும் தகவலை மறுத்தார்.

அதேவேளை, அஸ்மின் அலி உலு லங்காட்டில் போட்டியிட்டால், வெற்றிபெறும் வாய்ப்பு அவருக்குப் பிரகாசமாக உள்ளது என்பதை அருட்செல்வன் ஒப்புக்கொண்டார்.

“பெரிய தேர்தல் இயந்திரங்களும் கூடுதல் நிதியும் அவரிடம் உண்டு. ஆனால், அமானா  கட்சியினர் அவரை ஆதரிக்கமாட்டார்கள். ஆக, அவர் இங்கே போட்டியிடுவார் என நான் எண்ணவில்லை,” என்றார் அவர்.