அயல்நாட்டு சினிமா நடிகர்களின் செல்வாக்கை நஜிப் தமது அரசியலுக்குப் பயன்படுத்துகிறாரா?

நேற்று 5-1-2018,  வெள்ளிக்கிழமை இரவு விருந்துடன் தொடங்கி கோலாலம்பூர் புட்கிட்ஜாலில்  அரங்கில் இன்று  சனிக்கிழமை 6-1-2018, நட்சத்திரக் கலை நிகழ்ச்சி மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுடன் நடக்கும் நட்சத்திர விழாவின் முக்கிய நோக்கம் என்ன என்பதைத் தென்இந்தியச் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெளிவு படுத்துவாரா என்று கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்கிறார்.

 

தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டடக் கட்டுமானம் ஒரு நீண்டநாள் திட்டம், அதற்கு அங்கேயே பலவாரான நிகழ்ச்சிகளின் வழி நிதி திரட்டவும் முடியும்! இங்கும் பிறகு ஒரு வேளை நிதிக்கான நிகழ்ச்சி நடத்தலாம்.

 

ஆனால், இங்கு இன்றைய அரசியல் சூழ்நிலையில் இந்நிகழ்ச்சி நடத்த வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் திரட்டத் திட்டமிட்டுள்ள நிதித் தொகையும், அந்நிகழ்ச்சியை இங்கு நடத்தத் தேர்ந்தெடுத்துள்ள காலமும்  இங்கு வாழும் மக்களிடையே வீண் சலசலப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அவர் குழுவினரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் சேவியர்.

 

அவர்கள் இங்கு ரிம10, ரிம20 மற்றும் ரிம30 வெள்ளிக்கான டிக்கெட்டுகளின் வழி 20 லட்சம் வெள்ளியைத்  திரட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தாலும், அந்தத் தொகையை இங்குத் திரட்ட முடியுமா என்ற கேள்வி எழுகிறது, காரணம், அந்த அரங்கத்தின் 50 ஆயிரம் இருக்கைகளையும் ரிங்கிட் 30 கே விற்றாலும்கூட சுமார் 15 இலட்சம் மட்டுமே திரட்டமுடியும், டிக்கெட் வருமானத்தில் ஏற்பாட்டு நிறுவனத்திற்கு 30 சதவீதமாவது வழங்க வேண்டும்..

 

அத்துடன் இங்குள்ள  சில இயக்கங்களின் எதிர்ப்பைச் சமாளிக்க உள்ளூர் கலைஞர்களின் இயக்கத்திற்கு ஒரு இலட்சம்  மற்றும் பல இயக்கங்களுக்கு  இலவச டிக்கெட்டுகளை வழங்கியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

 

ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டமாகச் சுமார் 300 தென் இந்திய நடிகர்- நடிகைகள் இங்கு வந்து தங்குவதற்கான  தங்கும் விடுதி உணவு போக்குவரத்து செலவுகள் எனப் பலவற்றை ஏற்பாட்டாளர்  கிடைக்கும் வருமானத்திலிருந்தே செலவிட  வேண்டியுள்ளது..

 

அது மட்டுமின்றி எஸ்ட்ரோவின்  இந்திய  ஒளியலை வரிசைகளில் ஓய்வின்றி மாறி-மாறி ஒளியேறிய விளம்பரத்திற்கான செலவுடன்  இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டு நிறுவனமான மைஈவண்ட்ஸ் நிறுவனத்தின் 30 சதவீத வருமானத்தையும், வரும் வசூலிலிருந்து கழித்து விட்டால் மிஞ்சுவது சொற்பமே என்பதாலேயே மலேசியர்களுக்கு இந்நிகழ்ச்சியின் உண்மையான நோக்கத்தின் மீது பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. என்கிறார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்,

 

மலேசிய பிரதமர், ரஜினிகாந்தை அவர் இல்லத்தில் சந்திப்பதும், நடிகரும் மரியாதைக்கு அவரை சந்திப்பதும் சரி. ஆனால்  இன்னும் இரண்டு மாதங்களில் இங்கு பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற நிலையிருக்கும் போது, ஒரு நாட்டு பிரதமர் மீது கட்டுக்கடங்காத ஊழல் புகார்கள் கூறப்பட்டுவரும் வேளையில் நடக்கும் சந்திப்பு சரியான தோற்றத்தை இரு சாராருக்கும் வழங்காது என்பதை இந்திய அரசியலில் கால்பதிக்க அறிக்கை விட்டுள்ள நடிகர் ரஜினிக்கு தவறாகப்படவில்லையா என்று  கேட்கிறார்  கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்,