ஜொகூர் அமானா : ஹராப்பானுக்காக அமானா மட்டுமே தியாகம் செய்கிறது

பக்காத்தான் ஹராப்பான் மாநாட்டைப் புறக்கணித்ததற்கு, ஜசெக மற்றும் பெர்சத்துவை விட அமானாவிற்கு குறைவான இருக்கைகளை ஒதுக்கியதே காரணம் என்ற குற்றச்சாட்டை, ஜொகூர் அமானா மறுத்துள்ளது.

அமானா மத்திய தலைமைக்கும் பக்காத்தான் ஹராப்பான் தலைமைக்கும் ஒரு தெளிவான செய்தியை வெளிப்படுத்த விரும்பியதாக, ஜொகூர் அமானா தலைவர் அமினொல்ஹுடா ஹாசன் குறிப்பிட்டார்.

“நாங்கள் சில விஷயங்களில் சொந்த நிலைப்பாட்டைக் கொண்டிருந்தோம்,” என்று அவர் கூறினார்.

“இருக்கை ஒதுக்கீடு, நீதி மற்றும் சமத்துவ முறையில் நடந்திருக்க வேண்டும், ஆனால் அது அப்படி நடந்ததாகத் தெரியவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

“கூட்டரசுப் பிரதேசத்தில் எங்களுக்கு இருந்த ஒரேஒரு நாற்காலியையும் நாங்கள் பெர்சத்துவிற்கு விட்டுக்கொடுத்துவிட்டோம், பிகேஆருக்கு அங்கு அதிக இடங்கள் இருந்தபோதும்.

“அந்த ஓர் இருக்கையையும் தற்காக்க இயலாததால், அதற்கு பொறுப்பேற்று டாக்டர் ஹத்தா ரம்லி கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத் தலைவர் பதவியை இராஜினாமா செய்துவிட்டார்.

“ஜொகூரில், ஆயேர் ஈத்தாம் நாடாளுமன்றத்தை அமானாவிடமிருந்து ஜசெக எடுத்துக்கொண்டது, மசீசவைவிட ஒரு நாற்காலி அதிகமாகப் போட்டியிட வேண்டும் என்பதற்காக.

“இறுதியில், ஜொகூரில் அமானா 2 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது, பூலாய் மற்றும் பாரிட் சூலோங்,” என்று அவர் சொன்னார்.

எதிர்த்தரப்பு கூட்டணிக்குத் தியாகம் செய்ய அமானா மட்டுமே தயாராக உள்ளது, மற்றக் கட்சிகள் தங்கள் சொந்த விருப்பத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன என்று அவர் கூறினார்.

“பக்காத்தான் ஹராப்பான் உருவாக்கத்தில் நாங்கள் முன்னணியில் இருந்தோம், ஜொகூர் ஹராப்பானுக்கு முதுகெலும்பாகவும் நாங்கள் இருக்கிறோம், ஜொகூர் மாநிலத்தின் முன்னணியாகவும் நாங்கள் விளங்குகிறோம்.

“ஆனால், இறுதியில் நாங்கள் ஜொகூர் மாநிலத்தின் முன்னணியாக பெர்சத்து ஆவதற்காக எங்கள் விருப்பங்களைத் தியாகம் செய்துள்ளோம். முன்னதாக, ஜொகூர் மாநிலப் பக்காத்தான் ஹராப்பான் தலைவராக சலாஹுடின் ஆயூப் (அமானாவின் துணைத் தலைவர்)  முன்மொழியப்பட்டார், இருப்பினும் அப்பதவி முஹிடின் யாசினுக்கு வழங்கப்பட்டது,” என அவர் குறிப்பிட்டார்.