ரபிசி: ஹரபான் இட ஒதுக்கீடு பிரதமரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும்

தீவகற்ப  மலேசியாவில்  பக்கத்தான்  ஹரபான்     இட  ஒதுக்கீடு   செய்துள்ள   விதம்  பிரதமர்   அளவுமீறிய  அதிகாரத்தைப்  பெறுவதைத்   தடுக்கும்  என்கிறார்  பிகேஆர் உதவித்    தலைவர்   ரபிசி  ரம்லி.

ஹரபான்  கட்சிகள்  நியாயமான  முறையில்   இடங்களைப்  பகிர்ந்து  கொண்டுள்ளன   என்றாரவர்.  அடுத்த   அரசாங்கத்தை   ஹரபான்  அமைக்கும்  பட்சத்தில்   கொள்கை   விவகாரங்களில்    பிரதமருக்கு   நான்கு  கட்சிகளின்  ஆதரவும்   தேவைப்படும். ஒரு   கட்சியின்  ஆதரவு   இல்லை  என்றால்கூட   அரசாங்கம்  கவிழ்ந்து  விடும்.

“நாங்கள்   வெற்றி  பெற்றால்   பிரதமர்,   முன்பு   டாக்டர்  மகாதிர்  முகம்மட்  இருந்ததுபோல்   அல்லது  இப்போது   நஜிப்  அப்துல்  ரசாக்   இருப்பதுபோல்   அளவுமீறி  அதிகாரம்   படைத்தவராக  இருக்க   மாட்டார்”,  என்று  ரபிசி   கூறினார்.

அதனால்தான்  பிரதமர்  வேட்பாளரை  முடிவு   செய்வதைவிட    இட ஒதுக்கீடு  மீதான  பேச்சுகள்  மிகுந்த  முக்கியத்துவம்   பெற்று  விளங்கின   என்றவர்  விளக்கினார்.

பெர்சத்துவுக்கு  52,  பிகேஆருக்கு  51,  டிஏபிக்கு  35,  அமனாவுக்கு  27  என  இடங்கள்  ஒதுக்கப்பட்டுள்ளன.

சாபா,  சரவா  இடங்கள்   குறித்து    அங்குள்ள  ஹரபான்   தலைமை   உள்ளூர்  கட்சிகளுடன்  பேசி   முடிவு  செய்யும்.

இப்போதைய   இட  ஒதுக்கீட்டைப்  பொருத்தவரை    ஹரபான்  பிரதமர்   எவரும்  இரும்புக்  கரம்  கொண்டு   ஆட்சி   நடத்த   முடியாது,  ஏனென்றால்   அதற்கான   ஆதரவு  இருக்காது   என்று  ரபிசி  விவரித்தார்.

“எந்தவொரு   கட்சியும்     மற்றொரு   கட்சிமீது   அதிகாரம்  செலுத்த  முடியாத  வகையில்     இட  ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.  அமனா  வெளிநடப்பு   செய்தால்கூட  அரசாங்கம்  கவிழும்.  அதனால்தான்  அது   தொடர்பான  பேச்சு  இழுஇழுவென்று  இழுத்துக்கொண்டு   சென்றது”,  என்றார்.