பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் முக்கிய ஆதரவாளரான தெமர்லோ நாடாளுமன்ற உறுப்பினர் நஸருடின் ஹசான் வேறொரு பாதுகாப்பான இருக்கைக்கு அனுப்படலாம் என்ற வலுவான ஊகம் வலம்வந்து கொண்டிருக்கிறது.
தெமர்லோவில் சூழ்நிலையை நன்கு அறிந்த வட்டாரங்கள் இது எதிர்பார்த்த ஒன்று என்று கூறுகிறார்கள். நஸருடின் அத்தொகுதிக்கு வராமல் இருப்பது அவர் மாறப் போகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது என்று கூறப்படுகிறது.
வேறு இடம் பார்த்துச் செல்வதற்கு முக்கியமான காரணம் 2013 ஆம் ஆண்டிலிருந்து அரசியல் விசுவாசத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் பாஸ் அத்தொகுதியில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.
2013 ஆம் ஆண்டில், பகாங்கில் பாஸின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக நஸருடின் 1,070 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
இப்போது, பிகேஆர் மற்றும் டிஎபி ஆகியவற்றுடனான உறவை பாஸ் முறித்துக் கொண்டுள்ளது. ஆகவே, நஸருடினை ஆதரித்த மலாய்க்காரர் அல்லாதவர்களின் வாக்குகளை பாஸ் எதிர்பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது.