பிஎஸ்எம் : பக்காத்தான் ஹராப்பானுடன் பேச்சுவார்த்தைக்கான கதவு இன்னும் திறந்தே இருக்கிறது

14-வது பொதுத் தேர்தலில், பல்முனை போட்டிகளைத் தவிர்க்க, பக்காத்தான் ஹராப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்த மலேசிய சோசலிசக் கட்சி தயாராக உள்ளது என்று கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன் கூறியுள்ளார்.

தேர்தல் இருக்கை பகிர்வு பேச்சுவார்த்தைக்குத் தங்களை அழைக்காதது வருத்தமளிப்பதாக அருட்செல்வன் தி மலேசியன் இன்சைட்-இடம் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் இன்னும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே உள்ளோம், ஆனால் தேர்தல் நெருங்கிவிட்ட பின்னர் பேச்சுவார்த்தை நடத்துவது சரியானது அல்ல. கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இதனை நாங்கள் சொல்கிறோம், கடைசி நேரத்தில்தான் ஹராப்பான் எதனையும் அறிவிக்கும்.

“பிஎஸ்எம் போன்ற ஒரு பழைய கட்சிக்கு, ஒரே ஓர் இடத்தைக் கொடுப்பது சங்கடமாக இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

பிஎஸ்எம் ஒரு சிறிய கட்சி, ஒரு பெரிய கூட்டணி என்ற வகையில், தற்போது பந்து ஹராப்பானிடம் உள்ளது, என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பத்து காஜா, சுங்கை சிப்புட், கேமரன் மலை , சுபாங் மற்றும் உலு லங்காட் நாடாளுமன்றத் தொகுதிகளில் பிஎஸ்எம் போட்டியிடவுள்ளதாக, அருட்செல்வன் தனது முகநூலில் நேற்று பதிவிட்டிருந்தார்.

அப்பதிவு, மக்களிடையே கலவையான கருத்துகளை வெளிபடுத்தியது. ஆதரவாளர்களில் சிலர் ஹராப்பான் மற்றும் பிஎன் –ஐ விட பிஎஸ்எம் சிறந்த தேர்வு என்றனர். அதேவேளை இன்னும் சிலர், பிஎஸ்எம்-ன் இச்செயல் எதிர்க்கட்சிக்கான வாக்குகளைச் சிதறடித்து, பிஎன்னுக்கு நன்மை அளிக்கும் என்றும் கூறியிருந்தனர்.

பிஎஸ்எம்-க்கு இது கடுமையான போராட்டமாக இருக்கும் என்பதை அருட்செல்வன் ஒப்புக்கொண்டார்.

“ஆனால், கட்சியின் வேட்பாளர்கள் தகுதியானவர்கள், பல ஆண்டுகள் அப்பகுதிகளில் பணியாற்றியவர்கள் என்பதே எங்கள் மூலதனம்.

“மேலும், எங்கள் வேட்பாளர்கள் அரசியல் அனுபவம் நிறைந்தவர்கள், நேர்மையானவர்கள், மக்கள் பணியில் முதன்மையானவர்கள்”, என்றும் அவர் கூறினார்.