குற்றச் செயல்களை முறியடிப்பது ஏவுகணை அறிவியல் அல்ல

ஐஜிபி அவர்களே, உங்களுக்குப் புதிய யோசனைகள் தேவை இல்லை. நீங்கள் உங்கள் போலீஸ் படை மீது கட்டுக்கோப்பை அமலாக்கினால் போதும். மக்கள் உங்களை நம்பத் தொடங்குவர்.

ஐஜிபி: குற்றச் செயல்களை குறைக்க எங்களுக்கு வழி சொல்லுங்கள்

குழப்பம் இல்லாதவன்: இது பெரிய ஏவுகணை அறிவியல் அல்ல. புதியதும் அல்ல. பொது அறிவு போதும் தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் அவர்களே.

அடிப்படையில் நன்கு தேர்ச்சி பெற்ற போலீஸ்காரர்கள் படையில் இருக்க வேண்டும். முதுநிலை அதிகாரிகள் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும்.

இரண்டாவதாக குற்றச் செயல்களைத் தடுக்க அதிகமான போலீஸ்காரர்கள் சாலைகளில் காணப்பட வேண்டும். போலீஸ் நடமாட்டம் அதிகமாக இருந்தால் குற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் குறையும்.

எல்லாவற்றையும் விட முக்கியமானது அமலாக்கம் ஆகும். சட்டங்கள் பாகுபாடு இல்லாமல் உருப்படியாக அமலாக்கப்பட வேண்டும்.  ( பேச்சுச் சுதந்திரத்தையும் ஒன்று கூடும் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் சட்டங்கள் அல்லது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை நான் குறிப்பிடவில்லை)

போலீசாரின் நேர்மைக்கு தலையாய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். நான் என்னுடைய அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன். ஒன்றுமறியாத தரப்புக்கள் மீது வன்முறை மருட்டல் விடுக்கப்பட்ட போது போலீசார் அழைக்கப்பட்டனர். அவர்கள், குற்றம் செய்தவர்களிடம் தங்களுடைய பெயர்-கார்டுகளைக் கொடுத்ததுடன் புகார் செய்தவர்களை அதனை மீட்டுக் கொள்ளுமாறு வற்புறுத்தியதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை.

நிக் வி: மேல் நிலையிலிருந்து கீழ் நிலை வரையில் முழு போலீஸ் படையையும் முதலில் திருத்தி அமையுங்கள். அதில் நீங்களும் இருக்க வேண்டும்.

அதனைச் செய்ய வேண்டுமானால் சுயேச்சையான நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்பட வேண்டும். அதில் அறிவாளிகளும் அரசியல் அரங்கில் இரு தரப்பையும் சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும் இடம் பெற வேண்டும். அவர்கள் அடுத்த ஐஜிபி-யைத் தேர்வு செய்யலாம்.

போலீஸ் நெறிமுறைகளை வலியுறுத்தும் யாருக்கும் விலக்கு அளிக்காமல் சுயேச்சையாக இயங்கக் கூடிய உண்மையான ஐஜிபி-யை நாம் காணும் வரையில் அரச மலேசியைப் போலீஸ் படையில் நாம் மாற்றத்தை பார்க்க முடியாது. அதனை யாரும் மதிக்கவும் மாட்டார்கள்.

மனிதன்: உங்கள் இன்ஸ்பெக்டர்களுக்கு நிர்வாக வேலைகளும் வழக்குகளும் அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். புகார் செய்யப்பட்ட குற்றங்களை புலனாய்வு செய்ய அவர்கள் மறுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.

ரூபி ஸ்டார்_4037: பொதுவாக நடக்கும் சில விஷயங்கள் அனைவருக்கும் தெரியும். பல வேளைகளில் நாம் குண்டர்களைக் காட்டிலும் போலீசாருக்கு அதிகம் பயப்படுகிறோம். காரணம் அவர்கள் உங்களை அடிப்பார்களா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது.

அது பொதுவான கருத்துத் தான். மக்களுக்கு உதவ பல போலீஸ் அதிகாரிகள் தங்கள் கடமைகளுக்கு அப்பாலும் செயல்பட்டுள்ளதை நான் பார்த்திருக்கிறேன்.

ஐஜிபி அவர்களே, உங்களுக்குப் புதிய யோசனைகள் தேவை இல்லை. நீங்கள் உங்கள் போலீஸ் படை மீது கட்டுக்கோப்பை அமலாக்கினால் போதும். மக்கள் உங்களை நம்பத் தொடங்குவர்.

சிலாஸ் ஜுக்திப்: ஐஜிபி கேலி செய்வதாக என் மனைவி நினைக்கிறார். அவரைக் காட்டிலும் பொது மக்களுக்கு அதிகம் தெரியும் என்றால் பொது மக்கள் அல்லவா அவருடைய வேலையைச் செய்ய வேண்டும்.

TAGS: