ஜொகூர் மாசாய்யில், கோயில் உடைக்கப்பட்ட சம்பவத்தில் அமைதி காக்கும்படி ஜொகூர் மந்திரி பெசார் முகமட் காலிட் நோர்டின், ஜொகூர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
நீண்ட காலமாக நடந்துவந்த நிலப் பிரச்சனையால் இச்சம்பவம் நிகழ்ந்துவிட்டது, மாநில அரசு மிகவும் நியாயமான தீர்வை வழங்கும் என்று காலிட் சொன்னார்.
“இந்த விவகாரத்தின் தீவிரத்தைத் தொடர்ந்து, அனைத்துத் தரப்பினரும் சகிப்புத்தன்மை, பகுத்தறிவு மற்றும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், அவசர அவசரமாக இதை மதிப்பீடு செய்யத் தேவை இல்லை.
“இப்பிரச்சனையைச் சுமூகமாகத் தீர்க்க, அனைத்து தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பு தருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று இன்று ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
நில உரிமையாளர் அந்நிலத்தை 1995-ல் வாங்கியதாகவும், கடந்த 2015 முதல் கோயில் நிர்வாகத்திடம் அந்நிலத்தைக் காலி செய்யுமாறு பல நோட்டுசுக்களைக் கொடுத்துள்ளதாகவும் காலிட் தெரிவித்தார்.
இறுதியாக, கடந்தாண்டு ஜூலையில் அந்நிலைத்தைக் காலி செய்ய நீதிமன்ற உத்தரவையும் நில உரிமையாளர் பெற்றுள்ளதாகவும் காலிட் கூறுனார்.
“தற்போதைய உடனடி தீர்வாக, மாநில அரசு வேறொரு இடத்தில் நிலம் வழங்க முடிவெடுத்துள்ளது.
“ஆனால், கோயில் நிர்வாகம் அதனை மறுத்துள்ளது, அதே இடத்தில்தான் கோயில் இருக்க வேண்டுமென பிடிவாதமாக உள்ளனர், அதனால்தான் இப்பிரச்சனை நீண்டகாலமாக நீடித்து வந்தது,” என்று காலிட் கூறியுள்ளார்.
இச்சம்பவம் வருத்தமளிப்பதாகவும், அதற்காக மாநில அரசு அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் காலிட் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஜொகூர் மாநில மஇகா தலைவர் எம். அசோகன் நில உரிமையாளர் வெளிநாட்டவர் என்றும், மலேசியர்களின் மத உணர்வுகளை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
கோயிலை மாநில அரசு வழங்கிய புதிய நிலத்தில் மாற்றியமைக்க, கோயில் நிர்வாகத்திற்குத் தேவையான உதவிகளை வழங்க மாநில மஇகா தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
“கோயில் நிர்வாகத்துடனான கலந்துரையாடலின் போது, அவர்கள் அங்கேயே கோயில் நிலைத்திருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
“மஇகா மந்திரி பெசாரைச் சந்தித்து, இக்கோரிக்கையை அவரிடம் வழங்கும், மாநில அரசு இதற்கு ஒப்புகொள்ளும் என்று நம்புவோம்,” என்று எம். அசோஜன் தெரிவித்தார்.
கம்போங் ஜாவாவில் ஒரு கோயிலை உடைத்து தே.மு. சிலாங்கூரில் ஆட்சியை இழந்தது. மாசாயில் ஒரு கோயிலை உடைத்து ஜொகூரில் ஆட்சியை இழக்கப் போகின்றது என்பதற்கு இது முன் அறிகுறியோ?