கேஆர்1எம்:உணவுப்பொருள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

“சில ஆண்டுகளுக்குமுன் சீனாவில் அரச உணவு, மருந்து நிர்வாகத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் ஊழல் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார்.”

மைடின், மிளகாய் சாறுமீது நடத்திய பரிசோதனையில் சுயஆதாயம் பெறும் சூழல் உள்ளதாகக் குற்றச்சாட்டு

ஜோ லீ:சில ஆண்டுகளுக்குமுன் சீனாவில், அரச உணவு, மருந்து நிர்வாகத்தின் முன்னாள் தலைவர் ஒருவருக்குக் கடமையைச் செய்யத் தவறியதற்காகவும் ஊழல் புரிந்ததற்காகவும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மலேசியாவில் சுகாதார அமைச்சுத்தான் உணவுப் பொருள்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பு. அமைச்சர் லியோ தியோங் லாய் அவருடைய வேலையைச் செய்கிறாரா?அல்லது கெடாய் ரக்யாட் 1மலேசியா(கேஆர்1எம்) பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சிந்தனையில் உருவான திட்டம் என்பதால் அவருக்கு நல்ல பிள்ளையாக நடந்துகொள்கிறாரா?

லியோ மேலும் தாமதித்தால் ஆயிரக்கணக்கானோர் கெட்டுப்போன மிளகாய் சாற்றால் பாதிக்கப்படலாம்.

ஜேம்ஸ் டீன்: பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவாவின் கூற்று உண்மையா என்பதைக் கண்டறிய சுகாதார அமைச்சு முற்படாவிட்டால், பிறகு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் காக்கும் பிரிவு மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யத் தவறிவிட்ட குற்றத்துக்கு இலக்காகும்.

கேஆர்1எம்-மில் விற்கப்படும் பொருள் அல்லது வேறு எந்தக் கடைப் பொருள் பற்றியும் புகார் செய்யப்பட்டால் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் காக்கும் பிரிவு அதை விசாரித்து உண்மையைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

கேஆர்1எம்-மும் அதற்குப் பொருள் விநியோகம் செய்யும் நிறுவனமும் செய்தியாளர் கூட்டத்தை நடத்திக் குற்றச்சாட்டுகளை மறுப்பது நியாயமாகாது.அவர்களின் நலனும் அதில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவ்வாறு செய்வது ஆதாயமுரண் விவகாரம் ஆகிவிடுகிறது.

கூக்கி: மைடின் நல்ல வியாபாரி. கேஆர்1எம்முடன் சேர்ந்து அவரது பெயரையும் கெடுத்துக்கொள்ளப் போகிறார்.

ஃபேப்: கேஆர்1எம் கடைகளை அமைத்ததில் தாம் அல்லது தம்  குழுமம் அடைந்த ஆதாயத்தை மைடின் தெரிவிக்க வேண்டும்.

பெயரிலி _3e4b: சுகாதார அமைச்சால் ஒன்றும் செய்ய முடியாது.அதுதான் அம்னோவின் கட்டுப்பாட்டில் உள்ளதே.

ஃபிரெட்டோ: பொறுப்பற்ற தயாரிப்பாளர்களிடமிருந்தும் வியாபாரிகளிடமிருந்தும் நாட்டு மக்களைக் காக்க வேண்டியது ஓர் அரசாங்க அமைப்பின் பொறுப்பாகும்.

ஆனால் மலேசியாவில், பணம், பேராசை, ஊழல் எதையும் யாரையும் வாங்கி விடும்.

ஜென்2: சுகாதார அமைச்சு மெளனமாக இருப்பது சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.

சுல், எம்பி பதவியைத் துறக்க பணம் கோரியதை மறுக்கிறார்

பெர்ட்தான்: முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் சையட் உசேன் அலி அண்மையில் வெளியிட்ட நூலில், அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதற்கு இடமளித்து தம் எம்பி பதவியைத் துறப்பதற்கு ஈடாக  60,000 ரிங்கிட் கோரியதாக கூறப்படுவதை கூலிம் பண்டார் பாரு சுயேச்சை உறுப்பினர் சுல்கிப்லி நூர்டின் மறுத்துள்ளார். இங்கு யார் சொல்வதை நம்புவது?

சைட் உசேனின் நம்பகத்தன்மை தெரிந்த ஒன்றுதான். அதனால் அதை அத்துடன் விட்டு விடுவோம். ஆனால் சுல்கிப்ளி, அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தம் கணவர் தம்மிடமிருந்து பெர்மாத்தாங் பாவ் தொகுதியைப் ‘பறித்துக்கொண்டார்’ என அழுதுபுலம்பியதாகக் கூறியிருக்கிறாரே அதுதான் சரியில்லை. 

எந்த மனைவி, அதுவும் பாலியல் வழக்குகளில் தம் கணவர்மீது புழுதிவாரி இறைக்கப்பட்ட போதெல்லாம் அவருக்குத் துணையாக பக்கத்திலேயே இருந்துவரும் வான் அசீசாவா இன்னொரு மனிதரிடம் சென்று தம் கணவர் துரோகம் செய்துவிட்டதாக புலம்பவார்?

நம்ப முடியாத பொய் என்பது இதுதான்.

கங்காரு: ஒரு தவளை சொல்வதை அது என்னதான் நம்பத்தக்கதாக இருந்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள். சுல்கிப்ளி கூலிம்-பண்டாரில் சுயேச்சையாக போட்டியிடட்டும், எத்தனை வாக்குகள் பெறுவார் என்று பாருங்கள். சுல்கிப்ளி, உமக்குக் கெடு வைக்கப்பட்டு விட்டது.

பெயரிலி_3இ8: தவளை சுல், நீர் நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு வாய்ப்புக் கொடுத்ததே அன்வார்தான். நூறாண்டுக் காலம் முயற்சி செய்தாலும் உமது சொந்த முயற்சியால் ஒரு எம்பி ஆகியிருக்க முடியாது.

பிகேஆர் கொடுத்த தொகுதியில் நின்று வெற்றிபெற்ற நீர் பின்னர் அன்வார், பிகேஆர் மற்றும் வாக்காளர்களின் முதுகிலேயே ஓங்கிக் குத்திவிட்டீர்.இந்நிலையில் மக்கள் யாரை நம்புவார்கள்?

நியாயவான்: சுல்கிப்ளி வேறு என்ன சொல்வார் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்? அட, அது கிடக்கட்டும் விடுங்கள். 13-வது பொதுத் தேர்தல் வரப்போகிறது. அதன்பின்னர் மறக்கப்பட்டவராக ஆகி விடுவார்.

கைருடின் ஹசான்: வாய்க்கு வந்ததைப் பேசுவது எளிது. ஆனால், அப்படிப் பேசுவதை எல்லாரும் நம்பி விடமாட்டார்கள்.

இப்போது மக்களை அவ்வளவு எளிதில் ஏமாற்றி விட இயலாது.

TAGS: