ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 371 குடும்பங்களைச் சேர்ந்த 1360 பேர் 13 வெள்ளத் துயர்த் துடைப்பு மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இன்று காலை 8 மணிவரை செகமாட்டில் நான்கு மையங்களில் 103 பேரும், மெர்சிங்கில் எட்டு மையங்களில் 1,225 பேரும், கோத்தா திங்கியில் ஒரே மையத்தில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேரும் இருந்ததாக மாநிலச் சுகாதார, சுற்றுச்சூழல், கல்வி, தகவல் ஆகிய விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும் குழுத் தலைவர் ஆயுப் ரஹ்மாட் கூறினார்.
வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச் சரிவால் இரண்டு சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜோகூர் பாருவை பகாங்கில் உள்ள குவாந்தானுடன் இணைக்கும் சாலையும் தெலோக் ஆரோங்கை தஞ்சோங் ரெசாங், எண்டாவ், பென்யாபோங் ஆகியவற்றுடன் இணைக்கும் சாலையும் பாதிக்கப்பட்டன.
மெர்சிங்கிலிருந்து குவாந்தானுக்கும் அல்லது மெர்சிங்கிலிருந்து ஜோகூர் பாருவுக்கும் செல்ல விரும்புவோர் மாற்றுச் சாலையாக ஜாலான் ஜெமாலுவாங்- நிதார் உத்தாமா சாலையைப் பயன்படுத்தலாம். தஞ்சோங் ரெசாங், எண்டாவ், பென்யாபோங் செல்வோர் ஜாலான் தஞ்சோங் ரெசாங்- ஜாலான் மெர்ச்சிங்/எண்டாவ்- ஜாலான் ஆயர் பாபான் வழியாகச் செல்லலாம்.