போலீஸ் படையிலிருந்து பணி ஓய்வு பெற்றவர்கள் பணிஓய்வு பெற்றாலும் நாட்டுக்கு விசுவாசமாக இருப்பதாக அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மறக்கக்கூடாது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
“கட்டொழுங்கு முக்கியம். அதைவிடவும் முக்கியமானது நாட்டுக்கும் சமயத்துக்கும் மன்னருக்கும் விசுவாசமாக இருத்தல்.
“இதைச் சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது. சீருடை அணிந்திருந்தாலும் சரி பணி ஓய்வு பெற்றவர்களாக இருந்தாலும் சரி நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மறந்து விடக்கூடாது.
“பணி ஓய்வு பெறுவதுடன் எடுத்துக்கொண்ட உறுதிமொழி முடிந்து போவதில்லை. உயிருள்ளவரை அதுவும் இருக்கும்”,என் புத்ரா உலக வாணிக மையத்தில் பணி ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் நஜிப் கூறினார்.
60வயது முடியும்போது உறுதிமொழியும் முடிந்து போய்விடுவதில்லை. சிலருக்கு 93 வயதாகிறது. இன்னும் இருக்கிறார்கள் என்றார். யாருடைய பெரையும் அவர் குறிப்பிடவில்லை. ஆனால், முன்னாள் பிரதமரும் பக்கத்தான் ஹரபானின் பிரதமர் வேட்பாளருமான டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு இவ்வாண்டில் 93 வயது ஆகப் போகிறது.
நாட்டை மேம்படுத்த அரசாங்கத்திடம் பல திட்டங்கள் இருப்பதாகவும் அவற்றைச் செயல்படுத்த போலீஸிலிருந்து பணி ஓய்வு பெற்றவர்களின் ஆதரவு தேவை என்றார்.