அம்னோ : ரிங்கிட் வலுவாக உள்ளது, எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு நேர்மையற்றது

பல்வேறு மீட்புத் திட்டங்களைச் செயல்படுத்திய அரசாங்கத்தின் முயற்சி காரணமாக, ரிங்கிட்டின் மதிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று அம்னோ இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் ஜமாவி ஜாபர் கூறினார்.

ரிங்கிட்டின் மதிப்பு வலுவாக இருப்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நல்லதொரு குறியீட்டைக் காட்டுவதோடு; மலேசியப் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது எனும் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெரிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்தக் கூற்றில் உண்மை இல்லை. 2017-ம் ஆண்டில், மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்புகளைச் சரிபார்த்த உலக வங்கி, 5.8% வளர்ச்சியடைந்துள்ளதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது,” என்று ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலை தொடரும் என்பதில் அம்னோ இளைஞர் பிரிவுக்கு நம்பிக்கை உண்டு என்றும் ஜமாவி தெரிவித்தார்.

“அரசியல் நிலைத்தன்மையோடு, அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளால், நாட்டின் பொருளாதார நிலை வலுப்பெறுவதோடு, உலகப் பொருளாதார நிலைமைக்கும் ஆதரவளிக்கும்,” என்று ஜமாவி நம்பிக்கை தெரிவித்தார்.