சுங்கை சிப்புட் நாடாளுமன்ற நாற்காலி தொடர்பில் விவாதிக்க, பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுட்டின் நாசுதியோன் இஸ்மாயில் தலைமையிலான ஓர் உயர்மட்டக் குழு, பிஎஸ்எம் கட்சியின் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமாரை விரைவில் சந்திக்க உள்ளது.
இரண்டு தவணைகளாக, சுங்கை சிப்புட் தொகுதியின் எம்பி-யாக இருக்கும் டாக்டர் குமார், இம்முறை பிஎஸ்எம் சின்னத்தில் போட்டியிட பிடிவாதமாக இருக்கிறார் என பிகேஆர் தரப்பு தெரிவித்துள்ளது.
“அப்படி அவர் பிஎஸ்எம் சின்னத்தில் நின்றால், பிகேஆருக்கு வேறு வழியில்லை, நாங்கள் எங்கள் கட்சி வேட்பாளரை அங்கு நிறுத்துவோம்; இது கண்டிப்பாக எதிர்க்கட்சிக்குப் பாதகமாக அமையும்,” என்றும் பெயர் குறிப்பிடாத அவர் கூறியுள்ளார்.
“இது எங்களுக்குத் தர்மசங்கடமான நிலை. சுங்கை சிப்புட் நாற்காலையை பிஎஸ்எம்-மிடம் கொடுத்துவிட்டால், எங்கள் கட்சி உறுப்பினர்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டிவரும்,” என்றார் அவர்.
சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சியான டிஏபியும் விரும்பியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“ஆனால் அதற்கு எதிராக, பிகேஆருக்கே அந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
பிஎஸ்எம் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தால், அந்நாற்காலியைத் தக்கவைத்துகொள்வதில் ஜெயகுமார் கடினமாக உழைக்க நேரிடும் என்று பிகேஆர் தரப்பு கூறுகிறது.
“வாக்காளர்கள் வலுமையான கட்சிகளின் பக்கமே – பாரிசான் நேசனல் அல்லது பக்காத்தான் ஹராப்பான்,” என்றார் அவர் மேலும்.
சுங்கை சிப்புட்டில் 70 விழுக்காடு வாக்காளர்கள் சீனர்களும் இந்தியர்களும், மலாய்க்காரர்கள் 30 விழுக்காடு.
2008-ல், முன்னாள் மஇகா தேசியத் தலைவர் ச.சாமிவேலுவிடமிருந்து அத்தொகுதியை டாக்டர் குமார் வென்றெடுத்தார். அதனைத் தொடர்ந்து, 2013-ல் மஇகா துணைத் தலைவர் எஸ்.கே.தேவமணியைத் தோற்கடித்து, அத்தொகுதியைத் தக்கவைத்துகொண்டார்.
இதற்கிடையே, பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம், “கட்சியின் தேர்தல் நடவடிக்கைக் குழுவிடம் பேசாமல், தனிப்பட்ட முறையில் விவாதிக்க எங்கள் வேட்பாளரை அழைப்பது முதிர்ச்சியான அரசியலைக் காட்டவில்லை”, என்று கூறியுள்ளார்.
“எங்களுக்குத் தேர்தல் நடவடிக்கை குழு இயக்குநர் இருக்கிறார், செயலவையினர் இருக்கிறார்கள், அவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதே சரியான முறை,” என்றும் சிவராஜன் செம்பருத்தி.கோம்-இடம் தெரிவித்தார்.
டாக்டர் ஜெயக்குமாரைச் செம்பருத்தி.கோம் தொடர்பு கொண்டபோது, இன்னும் தனக்கு எந்தவொரு அழைப்பும் அவர்களிடமிருந்து (பிகேஆர்) வரவில்லை என்று தெரிவித்தார்.
“ஹராப்பானுடன் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் எப்போதுமே தயார், ஆனால் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேச ஒன்றுமில்லை. சுங்கை சிப்புட் தொகுதியை வென்றெடுக்க பலரும், குறிப்பாக கட்சி உறுப்பினர்கள் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர், ஆக நான் ஒருவனாக முடிவெடுக்க முடியாது,” என்றார் அவர்.
“அவர்கள் (பிகேஆர்) கட்சியின் தேர்தல் நடவடிக்கைக் குழுவைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். நானும் அக்குழுவில் இடம் பெறுவேன், ஆனால் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை,” என்று டாக்டர் ஜெயக்குமார் மேலும் தெரிவித்தார்.