நாட்டு அரசியலில் ம.இ.கா காலத்துக்கு ஒவ்வாதது!

 

.இ.கா உண்மை, நேர்மை, தொலைநோக்கமற்ற அதன் தன்மையால் படிப்படியாக அதன் அவசியத்தை இழந்து வருகிறது. இந்நாட்டு  அரசியலில் ம.இ.கா அதன் பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் இழந்து வருகிறது என்பதற்குப் போதுமான ஆவணங்கள் சான்றாக உள்ளன. எனது இக்கருத்தின் மீது ம.இ.காகாரர்களுக்கு ஏதும் சந்தேகமிருந்தால், இந்தியச் சமுதாயத்திலுள்ள பல கல்விமான்களைக் கொண்டே அதனை ஆய்வு செய்து கொள்ளலாம் என்கிறார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

இதற்கு முன் அரசாங்கத்தில் இந்தியர்களின் உரிமைகளை மட்டும் அம்னோவிற்குத் தானம் செய்து வந்த ம.இ.கா இப்பொழுது அதன் அரசியல் உரிமையையும் தோழமை கட்சியான அம்னோவிடம் இழந்து விட்டது. கடந்த தேர்தலில் 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி எதிர்வரும் தேர்தலில் மேலும் பல தொகுதிகளை அம்னோவிற்குத் தானம் செய்ய இருப்பது உறுதியாகி விட்டது.

 

நாட்டில் பாகுபாடின்றி மக்கள் தொகையின் பெருக்கத்திற்கு ஏற்பச் சரிசம எண்ணிக்கையிலான வாக்காளர்களின் எண்ணிக்கையைக் கொண்டும், இயற்கையான ஆறு, மலைத்தொடர், காடு, ஏரி, கடல்  அல்லது செயற்கையான விரைவு சாலை, சாலை, மாநில, மாவட்ட, வட்ட எல்லைக் கோடுகளை அடிப்படையாகக் கொண்டும் தேர்தல் தொகுதிகளை வரையறை செய்யவே சுதந்திரக் கால அரசியல் சாசனம் அரசாங்கத்திற்கு  அதிகாரம் வழங்கியிருந்தது.

 

ஆனால், அரசியல் சாசனத்தில் அம்னோ அதன் விருப்பம் போல் மாற்றம் செய்யவும், தேர்தல் ஆணையத்தை  அம்னோவின் ஓர் உட்பிரிவைப் போலச் செயல்பட உதவிய ம.இ.கா, மசீச போன்ற இதர பங்காளி கட்சிகள் அனைத்தும் இன்று, அதன் பற்களை இழந்து நிற்கின்றன என்றால் மிகையாகாது.என்கிறார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

அதனால் இப்பொழுது அம்னோ அதன் விருப்பப்படி தொகுதிகளின்  எல்லையையும் வாக்காளர்களின் எண்ணிக்கையும் கொண்டு புதிய தொகுதிகளை உருவாக்கி வருகிறது. அம்னோவிற்குச் சாதகமான தொகுதி என்பதனால்  15,000 வாக்காளர்களுக்கு  ஒரு தொகுதியும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் என்பதால் அல்லது மலாய்க்காரர் அல்லாதவர்கள் அதிகம் வாழும் தொகுதி என்பதால் 150,000 வாக்காளர்களைக் கொண்ட ஒரு தொகுதி அமைப்பது எவ்வகையில்  நியாயமாகும்?

 

ஆளுக்கு ஒரு ஓட்டு வழங்கும் ஜனநாயக இலட்சணமா?

 

இதுவா ஒருவருக்கு ஒரு ஓட்டு வழங்கும் ஜனநாயக இலட்சணம்? தேர்தல் ஆணையத்தை அம்னோவின் கைப்பாவையாக்கியதால், ம.இ.கா தனது பங்க்காகச் செனட்டர் பதவியை வாங்கிக் கொள்ளலாம், ஆனால் அவர்கள்  அடகு வைத்தது கிடைப்பதற்கரிய மக்களின், குறிப்பாக இந்தியர்களின் அடிப்படை அரசியல் உரிமை என்பதை அறியாத பிண்டங்களா ம.இ.கா தலைவர்கள்?

 

சுதந்திர மலாயாவை அன்று காப்பாற்றியது ரப்பர் தோட்டத்துறை. ஆனால் அதிலிருந்து கிடைத்த வருமானம் இம்மியளவும் ரப்பர் தோட்டப் பாட்டாளிகளின் நல்வாழ்வுக்கு ஒதுக்கப்படவில்லை. ஆனால் மாரா, பெல்டா, ரிஸ்டா போன்ற கிராமப்புற மக்கள் மறுவாழ்வுக்கும் மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டது.

 

அதே காலக்கட்டத்தில் தோட்டப்புறங்களில் உள்ள மக்களுக்கான பள்ளிகள், சாலை, குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளைக்கூடத் தோட்ட நிர்வாகமே வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது என்கிறார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

அதுமட்டுமா? இந்தியர்களின் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்யக் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு என்று போர்வையில் 60 ஆம் ஆண்டுகளில் தோட்டப்புற ஆண்களும் பெண்களும் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைக்கு ஆட்படுத்தப்பட்டனர். அதனால் அவர்கள் அனுபவித்த வேதனைகள், துன்பங்கள் மற்றும் மரணமும் மறக்க முடியாதவையாகும் என்கிறார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

அன்னியத் தொழிலாளர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு எந்த அமைச்சரவை அனுமதி  அளித்தது? குறிப்பாகத் தோட்டத் தொழிலை அடையாளப் படுத்தித்தானே அன்னியத் தொழிலாளர்களை அரசாங்கம் நாட்டிற்குள் கொண்டு வந்தது. அன்று தோட்டத் தொழிலை நம்பி இருந்த இனம் நாம், நமது மக்களின் அடிப்படை ஜீவாதாரம் பாதிக்கக்கூடும் என்பதை அறியாத மனிதரா, அல்லது அக்கறையற்றவரா ம.இ.கா அமைச்சர்?

 

இன்றும் நமது மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் பின்னடைந்து வருகிறது. அரசாங்கத்துறைகளில் மட்டுமின்றி தனியார் தொழில் துறைகளிலும் வேலைச் வாய்ப்புகளை இழந்து வருகின்றனர், ஆயிரம் வெள்ளிக்கு 8 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்யும் அன்னியத் தொழிலாளர்கள் கிடைக்கும் பொழுது அதிக ஊதியத்தில் இந்தியர்களைப் பயன்படுத்த எந்த நிறுவனம் முன்வரும்?

 

சமீபத்தில், வளர்ச்சி குன்றிக் காணப்பட்ட இரு பிள்ளைகளின் குடும்பங்களின் நிலை குறித்து ஆராய்ந்ததில். சுமார் 2 ஆயிரம் வெள்ளிகளை மட்டும் குடும்ப வருமானமாகப் பெறும் நான்கு குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளுக்கு அன்றாட உணவு சோறு, கிட்சாப், முட்டை அல்லது கருவாடு மட்டுதான் என் அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.

 

மக்கள் நல்ல உணவுக்குக்கூட வழியில்லாத வாழ்வை நடத்துகிறார்கள். ஒரு சமுதாயம் அடையாளப்பத்திரம் மட்டுமின்றி வளரவில்லை? அதன் மற்றொரு பக்கம் உண்ண ஒழுங்கான உண்ணக்கூட இன்றி வளர்ச்சி குன்றிய நிலையில் ஊனமாக உருவெடுத்து வருவதை உடனடியாகக் கவனிக்காமல் விட்டால், ஏழ்மை ஒட்டு மொத்தச் சமுதாயத்தையும் நாசப்படுத்தி விடும் என்பதை நாம் உணர வேண்டும்.

 

ஆக, இன்று நமக்குத் தேவை உணவுக்கான பொருளாதாரத் திட்டமா? B-40 என்னும் 3000 ஆயிரம் வெள்ளிக்குக் கீழ் மாத வருமானங்களைக் கொண்ட மக்களின் குடும்ப வருமான மேம்பாடு, உணவு பொருட்களின் விலை குறைப்புக்கான வழியே! ஆனால் ம.இ.கா காட்டிய வழி மைக்கா ஹோல்டிங்ஸ், நஜீப்பும் பாரிசானும் காட்டும் வழி அமானா சஹாம் சர்க்கஸ்.

 

நமக்குத் தேவை நல்ல உணவு, பிள்ளைகளுக்கு ஒழுங்கான கல்வி, குடும்பத்துக்கு ஒரு வீடு. ஆனால், இன்றைய பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும் தேவை  பில்லியன், மில்லியன் கணக்கில் வாங்கிச் சேமிப்பு, அயல் நாட்டில் வங்கி கணக்கு, அயல் நாட்டில் ஆடம்பரக் குடியிருப்பு, அயல் நாட்டில் குடியேற அனுமதி, அயல் நாட்டு சூதாட்டக் கிளப்பில் உறுப்பியம், ஆடம்பர விமானம், கைப்பை வாங்க இலட்சம், கடிகாரம் வாங்க  மில்லியன், வைரம் வாங்கப் பல மில்லியன்கள்!

 

ஆக, மக்கள் இன்று எடுக்க வேண்டிய முக்கிய முடிவு தங்கள் குடும்பமா? தங்கள் பிள்ளைகளின் கல்வியா? அல்லது பிரதமர், அமைச்சர்கள் ஆகியோரின் ஆடம்பர வாழ்வா? அவர்களின் குடும்பம் மற்றும் சுற்றத்தாரின் அயல்நாட்டு சுகபோக வாழ்வுக்காக இன்னும் எத்தனை காலம் சொந்தப் பிள்ளைகளின் நலனை மலேசியர்கள் பணயம் வைக்கப் போகிறோம் என்பதைச் சீர்தூக்கிப் பார்த்து முடிவு எடுக்க வேண்டிய முக்கியக் கட்டத்திற்கு வந்து விட்டோம் என்கிறார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.