குணமடைந்து வரும் கிட் சியாங் மீண்டும் அரசியல் களமிறங்குகிறார்

 

ஒரு சிறு கட்டியை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிட்சையத் தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக குணமடைந்து வரும் டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மீண்டும் ஜனவரி 27 இல் அரசியல் களம் காண்கிறார்.

டிஎபி ஜோகூர் தலைவர் லியு சின் தோங் இதனை மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.

ஆனால், கிட் சியாங் எந்தத் தொகுதிக்கு – கெலாங் பாத்தா அல்லது ஆயர் ஹீத்தாம் – செல்வார் என்பது பற்றி லியு மௌனம் காத்தார்.

கிட் சியாங் அவரது நாடாளுமன்ற தொகுதியான கெலாங் பாத்தாவுக்குச் செல்வார் என்று மலேசியாகினிக்கு தெரியவந்துள்ளது.

ஆயர் ஹீத்தாம் நாடாளுமன்ற தொகுதியை டிஎபி முற்றுகையிட்டுள்ள தருணத்தில் கிட் சியாங் மீண்டும் களமிறங்கிறார்.

மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் ஆயர் ஹீத்தாம் தொகுதி மசீசவின் துணைத் தலைவர் வீ கா சியோங் வசம் கடந்த மூன்று தவணைகளில் இருந்து வந்துள்ளது. ஆனால், அவரது பெரும்பான்மை ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்து கொண்டே வந்துள்ளது.

எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் அத்தொகுதியைக் கைப்பற்றுவதில் டிஎபி மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.

மேற்கு மலேசியாவில் நாடாளுமன்ற இருக்கைகள் பகிர்வு பற்றிய பேச்சுவார்த்தையின் போது அமனா, ஆயர் ஹீத்தாம் இருக்கையை டிஎபிக்கு விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று. இருப்பினும், விட்டுக்கொடுக்கும் அடிப்படையில் அமனா வேட்பாளர் டிஎபி சின்னத்தின் கீழ் போட்டியிடுவார்.