இன்று, மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எஸ்கேஎம்எம்), ஈப்போவில் உள்ள தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் ங்கா கோர் மிங் வீடு, ஆயேர் தாவாரில் உள்ள அவரின் பெற்றோர் வீடு மற்றும் தைப்பிங்கில் உள்ள அவரது மக்கள் சேவை மையம் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டதோடு, அவரின் கைப்பேசியையும் கைப்பற்றி சென்றுள்ளது.
பாரிசான் அரசாங்கத்தை இளிவுப்படுத்துதல் உட்பட, சில தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தது தொடர்பில், அந்தச் சோதனை நடத்தப்பட்டதாக பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙே கூ ஹாம் தெரிவித்தார்.
“அப்பதிவுகள் ங்கா-வின் கணக்கிலிருந்து வந்ததா என்பதை எஸ்கேஎம்எம் இன்னும் உறுதிபடுத்தவில்லை. இதற்கு முன்பாக அவரின் படங்கள் மற்றும் பெயரைப் பயன்படுத்தி, இதுபோன்ற பல போலி பதிவுகள் வந்துள்ளன,” என்று ஙே மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
சமூக ஊடகத்தில் வெளியான அச்செய்தி பற்றிய தகவல் தெரியவில்லை.
செக்ஷன் 233(1) எஸ்கேஎம்எம் சட்டம், பிணைய வசதிகள் அல்லது பிணையச் சேவையின் முறையற்ற பயன்பாட்டின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.
சுங்கை செனாம் காவல்நிலையத்தில், பேராக் மாநில டிஏபி தலைவருமான ங்கா எஸ்கேஎம்எம்-ற்கு விளக்கம் அளிப்பார் என்று மேலும் அவர் சொன்னார்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை இது என்று அவர் குற்றம் சாட்டினார்.
“இதுபோன்று இன்னும் பலரின் வீடுகளை எஸ்கேஎம்எம் இனி சோதனையிடும், மக்களை அச்சுறுத்த,” என்றார் அவர்.
ங்கா எஸ்கேஎம்எம்-ன் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.