14வது பொதுத் தேர்தலில் கிளந்தானை பாஸுக்கே விட்டுக்கொடுக்க அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்குடன் ஒரு இரகசிய உடன்பாடு செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படுவதை அபத்தம் என்று கிளந்தான் அம்னோ தலைவர் முஸ்தபா முகம்மட் சாடியுள்ளார்.
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பிபிபிஎம்) உச்சமன்ற உறுப்பினர் ஏ.காடிர் ஜாசின் அப்படியொரு புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறார் என்றும் அது ஒரு தேர்தல் தந்திரம் என்றும் அவர் சொன்னார்.
“14வது பொதுத் தேர்தல் வருவதைக் கருத்தில்கொண்டு எனக்கும் நஜிப்புக்குமிடையே பிளவு ஏற்படுத்த முனைகிறார்கள்.
“கிளந்தானைக் கைப்பற்றுவதில் பிஎன்னுக்கு அக்கறை இல்லை என்பதைக் காட்டுவதற்காக அப்படியொரு ஒரு முயற்சி நடைபெறுகிறது”, என்றார்.
அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சருமான முஸ்தபா, 14வது பொதுத் தேர்தலில் கிளந்தான் பிஎன் கிளந்தானில் பாஸ் ஆட்சிக்கு முடிவு கட்டும் என்று நம்புகிறார்.
“மும்முனைப் போட்டி என்றால் வாக்குகள் சிதறும் அது பிஎன்னுக்கு சாதகமாக அமையும். பாஸ்மீது மக்கள் அதிருப்தி கொண்டிருப்பதால் கிளந்தானைக் கைப்பற்ற காலம் கனிந்துள்ளது”, என்றாரவர்.