‘அம்னோவைப் பாதுகாக்க வேண்டும், அழிக்கக்கூடாது’ என்று இரண்டாம் பிரதமர் மகாதீரிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மகாதீர் சரியான அரசியல் பாதைக்குத் திரும்ப வேண்டுமென, இன்று துன் அப்துல் ரசாக் ஹுசேனின் பேரன் மகாதீரைக் கேட்டுக்கொண்டார்.
“மலேசியாவை வழிநடத்தவும், அம்னோவை வலுப்படுத்தி, பாதுகாக்கவுமே அப்துல் ரசாக் மகாதீரை அம்னோவுக்கு மீண்டும் கொண்டுவந்தார், மாறாக அம்னோவை அழிப்பதற்கு அல்ல.
“துன் மகாதீர், நாட்டின் நான்காவது பிரதமராக உங்களை உருவாக்க, துன் அப்துல் ரசாக் உங்களுக்குக் காட்டிய வழிக்குத் திரும்புங்கள்,” என்று நஜிப்பின் மகன், நாஷிஃபுட்டின் நஜிப் ஒரு முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
1969-ல், துங்கு அப்துல் ரஹ்மானை விமர்சித்ததற்காக, அம்னோவிலிருந்து விலக்கப்பட்ட மகாதீரை, ரசாக் பிரதமரான பின்னர், மீண்டும் கட்சிக்குக் கொண்டுவந்தார்.
மகாதீர், தனது தகப்பனாரைத் தாக்கி பேசுவது ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்த அவர், மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்காக, டிஏபி உடன் சேர்ந்துகொண்டு, மகாதீர் ‘கண்ணியத்தை அடகு வைத்துவிட்டார்’ என்றும் கூறியுள்ளார்.
அப்துல் ரசாக்கைப் போல் வாழுங்கள்
காலம் மாறிவிட்டது, மக்களின் தேவைகளும் விருப்பங்களும் கூட மாறிவிட்டன என்றார் அவர்.
“எனவே, மகாதீர் நஜிப் மீது மிகுந்த கோபமாக இருக்க தேவையில்லை, அவரை நன்கு அறிந்த பெரும்பான்மை மக்கள் கூறுவதைப்போல், அவருக்கு வேறு உள்நோக்கம் எதுவும் இருந்தால் ஒழிய,” என்று அவர் கூறினார்.
1987-ல், அம்னோ தலைவர் பதவிக்கு மகாதீரை நஜிப் ஆதரித்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.
“உண்மையில் மகாதீர் துன் ரசாக்கை மதித்தால், அவரின் சேவையைப் பாராட்டினால் நஜிப்பை அவர் தற்காக்க வேண்டும், நஜிப் அவரைத் தற்காத்தது போல.
“உண்மையில் ரசாக் மீது அன்பு இருந்தால், அவரைப் போல் வாழ வேண்டும், இறுதி மூச்சுவரை அம்னோவோடு இருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.