இரண்டு மாதங்களுக்கு முன்னதாக, அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்க வேண்டும்

14-வது பொதுத் தேர்தலுக்கான தேதியை, இரண்டு மாதங்களுக்கு முன்னதாக அறிவிக்க வேண்டுமென ஷங்காய் பெர்சே, மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இதன்வழி, வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள், வாக்களிக்க மலேசியா வருவதற்கு இலகுவாக இருக்கும் என்று அது தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் பெரும்பாலான மலேசியர்கள், பணி நிமித்தமாகவும் மேற்கல்விக்காகவும் அங்கு இருப்பதால், அவர்கள் முன்கூட்டியே தங்கள் விடுமுறைக்கு விண்ணப்பிக்க வேண்டியுள்ளதோடு; இது அவர்களின் பண விரயத்தையும் குறைக்க உதவும் என்று அந்த அரசு சாரா அமைப்பு கூறியுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் தேர்தல் தேதியை அறிவிக்கும் ஐக்கிய இராச்சியத்தில் நடைமுறையை, மலேசியா பின்பற்ற வேண்டும் என்று பெர்சே கூறியது.

2012-ல், பெர்சே 3.0-வின் போது அமைக்கப்பட்ட ஷங்காய் பெர்சே, கடந்த 13-வது தேர்தலின் போது, ‘ஃப்லை பேக் டு வோட்’ (வாக்களிக்க பறந்து செல்லுங்கள்) எனும் இயக்கத்தை நடந்தியது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, வாக்களிக்க நாடு திரும்பும் மலேசியர்களுக்கு சிறப்பு சலுகை கட்டணத்தை விதிக்கச்சொல்லி மலேசியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஆசியாவை அது கேட்டுக்கொண்டது.

வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்களுக்கு, தபால்வழி வாக்களிக்கும் முறையை தேர்தல் ஆணையம் கடந்த பொதுத் தேர்தலில் இருந்து அறிமுகப்படுத்தி இருந்தபோதும், முறையான கண்கானிப்பு இல்லாமல் தபால் வாக்குகள் எண்ணப்படுவதால், அதில் நம்பகத்தன்மை இல்லை என்று ஷங்காய் பெர்சே தெரிவித்தது.

“எனவே, வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்கள் தபால் வழி வாக்களிக்கப் பதிவு செய்யாமல், நாடு திரும்பி வாக்களியுங்கள்,” என்று ஓர் அறிக்கை வாயிலாக அது கேட்டுக்கொண்டது.