பிரதமர் வேட்பாளர் : மலேசியா அமெரிக்கா அல்ல, ஹாடி கூறுகிறார்

பொதுத் தேர்தலின் போது, பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்க, மலேசியா ஒன்றும் அமெரிக்கா அல்ல என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியுள்ளார்.

அப்துல் ஹாடியைப் பொறுத்தவரையில், பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதை விட, ‘நபிகள் காட்டிய வழியில் பயணிப்பது’ மற்றும் ‘இஸ்லாத்தின் கோட்பாடுகளில் நம்பிக்கை வைப்பது’ ஆகியவைதான் பாஸ்-சுக்கு இப்போது முக்கியம் என்று, இன்று ஷா ஆலாமில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசினார்.

முன்னதாக, டாக்டர் மகாதீர் பாஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார்? பாஸ், தன்னை ஆதரிக்கிறதா அல்லது அம்னோ தலைவர் நஜிப்பை ஆதரிக்கிறதா என்று கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னும் வாக்காளர்களாகப் பதிவு செய்யாத, இளைஞர்களையும் அவர் தனதுரையில் சாடினார். அது இஸ்லாத்துக்கு எதிரான செயல் என்றும் அவர் சொன்னார்.

“இஸ்லாம் அனைத்து மனித வாழ்வையும் உள்ளடக்கியது. எனவே, ஒரு நியாயமான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்து நடத்துவது, மற்றவர்களைவிட இஸ்லாமியர்களுக்கு கட்டாயமானது.

“ஆனால், துரதிருஷ்டவசமாக இன்று பல முஸ்லீம்கள், குறிப்பாக இளைஞர்கள் வாக்களிக்க விரும்புவதில்லை.

“இது இஸ்லாம் மதத்திற்கு நேர்மாறான, தவறான கருத்தாகும்,” என்றும் அவர் கூறினார்.