எதிர்க்கட்சிக்கு ஆதரவான ஆசிரியர்களை, தான் எச்சரித்ததாக வெளிவந்த செய்தி அறிக்கைகளைக், கல்வி அமைச்சர் மஹ்ட்சீர் கலிட் மறுத்தார்.
அந்தச் செய்தியில் உண்மையில்லை, நிருபர்கள் தவறாக புரிந்துகொண்டனர் என்று மஹ்ட்சீர் கூறியதாக, தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
“வாக்களிப்பது இரகசியமானது, ஆக எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பவர்களுக்கு நான் எப்படி எச்சரிக்கை விடுக்க முடியும்,” என்று அவர் கேட்டார்.
கடந்த வெள்ளியன்று, ஒரு சீனப் பத்திரிகை எதிர்க்கட்சிகளில் பதவி வகிக்கும் ஆசிரியர்கள் தங்கள் அரசுபணியை இராஜினாமா செய்ய வேண்டும், காரணம் அவர்களின் விமர்சனங்கள் அரசாங்கத்தைக் குறை கூறுபவையாக உள்ளன என்று செய்தி வெளியிட்டது.
இருப்பினும், அரசியலில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்கள், விதிகளை மீறாமல் அரசியலில் கவனம் செலுத்த வேண்டுமென மஹ்ட்சீர் நினைவூட்டியதாக பெர்னாமா செய்திகள் கூறின.
“அவர்களின் அரசியல் ஈடுபாட்டிற்கும் அரசு பணிக்கும் இடையேயான கருத்தியலைதான் நான் நினைவுபடுத்தினேன்.
“எதிர்க்கட்சியினரைப் போல அவர்கள் செயல்பட முடியாது, காரணம் அவர்கள் அரசாங்க கொள்கைகளைச் செயல்படுத்த வேண்டிய பொது ஊழியர்கள்.
“நான் எந்த அச்சுறுத்தல்களையும் செய்யவில்லை, எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பவர்களைப் பணியிலிருந்து நிற்குமாறும் கேட்டுக் கொண்டதில்லை,” என்று அவர் கூறினார்.