அம்னோவை நிராகரியுங்கள், லங்காவி வாக்காளர்களுக்கு டாக்டர் எம் அறைகூவல்

பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளர் துன் டாக்டர் மகாதீர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்னோவை நிராகரிக்கச் சொல்லி லங்காவி வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.

நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து எதிர்க்கட்சியினர் வசமாகாத லங்காவி, அம்னோவின் கோட்டை என்று தெரிந்தும், லங்காவி வாக்காளர்களை அவர் இவ்வாறு வலியுறுத்தி உள்ளார்.

“அம்னோவை நிராகரிப்பதற்கான நேரம் வந்துவிட்டது,” என்று டாக்டர் மகாதீர் நேற்று லங்காவியில் ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.

லங்காவி நாற்காலியை, ஹராப்பான் கூட்டணி பெர்சத்து-வுக்கு ஒதுக்கியுள்ளது.

லங்காவி தீவை மேம்படுத்தி, புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக உருவாக்கிய பெருமை டாக்டர் மகாதீருக்கு உண்டு.

லங்காவி மக்கள் அம்னோவுக்கு விசுவாசமானவர்கள் என்றார் மகாதீர்.

“அது லங்காவி மக்களின் பாரம்பரியம், அவர்கள் அம்னோ மீது விசுவாசமுள்ளவர்கள், அம்னோவுக்கு உதவி செய்கிறார்கள்.

“ஆனால், அம்னோவின் நன்றியைப் பாருங்கள், வரிவிலக்கு தகுதியை மீட்டுக்கொள்ள உள்ளனர்.

“(பிரதமர்) நஜிப் ரிம 5 பில்லியனை லங்காவிக்கு கொடுப்பதாகக் கூறினார், ஆனால் ஒரு காசுகூட கிடைக்கவில்லை,” என்றார் அவர்.

லங்காவியில் பாஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்றும் மகாதீர் கூறினார்.