ஜொகூர் சுல்தான் : கோயில் உடைப்பு பிரச்சனையைச் சுமூகமாகத் தீர்க்கவும்

மாசாய் ஶ்ரீ ஆலாமில், 80 ஆண்டுகால கோயில் உடைப்பு பிரச்சினையைச் சர்ச்சைக்குரியதாக ஆக்க வேண்டாம் என்று, ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் கேட்டுக்கொண்டார்.

இன்று, ஶ்ரீ சிவசக்தி ஶ்ரீ சின்னக்கருப்பர் ஆலய நிர்வாக செயலவையினர், புக்கிட் பெலாங்கி அரண்மனையில் தன்னைச் சந்தித்ததாக, சுல்தான் அவரது அதிகாரப்பூர்வ முகநூல் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அச்சந்திப்பின் போது, உடைபட்ட கோயிலைக் கட்டியெழுப்ப, ஒரு புதிய நிலத்தை மாநில அரசு வழங்குவதைத் தான் உறுதிசெய்வதாக அவர் கூறினார்.

மேலும், கோயில் நிர்மாணிப்புக்குச் சுல்தான் இப்ராஹிம் தரப்பிலிருந்து ரிம170,000 நிதியுதவி வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இப்பிரச்சனையைச் சுமூகமாக களைய அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் சுல்தான் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஜனவரி 11-ல், நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக அக்கோயில் இடிக்கப்பட்டது.

1994-ல், அக்கோயில் நிலத்தை சிங்கப்பூரியர் ஒருவர் வாங்கிவிட்டார். இருப்பினும், முந்தைய நில உரிமையாளருடன் ஒப்பந்தம் செய்திருந்ததால், கோயில் நிர்வாகத்தினர் அவ்விடத்தைக் காலி செய்ய மறுத்து வந்தனர்.

முன்னதாக, ஜொகூர் மந்திரி பெசார் முகமட் காலிட் நோர்டின், ஶ்ரீ ஆலாமில் கோயில் நிர்மாணிப்புக்காக மாநில அரசு ஒதுக்கிய நிலத்தை ஏற்றுக்கொள்ள கோயில் நிர்வாகத்தினர் மறுத்ததாகக் கூறியிருந்தார்.

இருப்பினும், மாநில அரசு எந்தவொரு நிலத்தையும் தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கவில்லை எனக் கோயில் நிர்வாகம் கூறியது.