ஓய்வு பெற்ற முன்னாள் உயர்மட்ட அரசு அதிகாரிகாளின் அமைப்பான ஜி25, எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தலைப் புறக்கணிப்பது தவறானது என்பதோடு அது ஒரு பொறுப்பற்ற செயலாகும் என்று கூறுகிறது.
பொதுத் தேர்தலில் வாக்குகளைச் செல்லாததாக்க வேண்டும் அல்லது பொதுத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பரப்புரையைப் பற்றி கருத்துரைகையில் இவ்வாறு கூறிற்று.
அரசாங்கம் மற்றும் எதிரணி டாக்டர் மகாதிரை பிரதமர் வேட்பாளாராக அறிவித்திருப்பது ஆகியவற்றின் மீது கொண்ட அதிருப்தி காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.
14ஆவது பொதுத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற அறைகூவலை நாங்கள் நிராகரிக்கிறோம், ஏனென்றால் அது தவறானதோடு பொறுப்பற்ற செயலாகும். மேலும், அது தேர்தல் நடத்துவதற்கு எதிரான கருத்தை தவறான வழியில் தெரிவிப்பதாகும் என்று ஜி25 கூறுகிறது.
அரசாங்க அதிகாரிகள் சுயேட்சையான, நியாயமான தேர்தலை உறுதிசெய்வதில் குறைபாடுகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ளும் ஜி25, இதுவே நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. நமது ஜனநாயகத்தை சிறப்புறச் செய்ய நாம் அனைவரும் வாக்களித்து மாறுதலுக்கு ஆற்றல் அளிக்க வேண்டும் என்று ஜி25 இன்றிரவு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறது.
வாக்காளராகப் பதிவு செய்துள்ள அனைவரும் தேர்தல் தினத்தன்று வாக்களிக்க வேண்டும் என்று ஜி25 வலியுறுத்துகிறது.
வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல. அது நமது பொறுப்பும்கூட. குடிமக்களின் நல்வாழ்க்கையை எல்லாவற்றுக்கும் மேலானதாகக் கருதும் ஒரு தூய்மையான மற்றும் பொறுப்பான அரசாங்கம் வேண்டும் என்று கோருவது நமது உரிமையாகும் என்று கூறுகிறது ஜி25.
வாக்களிப்பது நமது கடமை என்பதை வலியுறுத்திய ஜி25, அப்போதுதான் நாம் பரிவு மற்றும் நீதி ஆகிய கோட்பாடுகளைச் சமயச் சார்பின்மை மற்றும் சமய விவகாரங்களில் கடைபிடிக்கும் தன்மையுடைய அரசாங்கத்தை நாம் பெற முடியும் என்று அது மேலும் கூறிற்று.
நல்லாட்சி மற்றும் நேர்மை ஆகியவற்றை ஆதரிக்கும் பிரதிநிதிகளை தேர்வு செய்வது மக்களின் பொறுப்பு என்று ஜி25 வலியுறுத்தியது.
ஜனநாயகச் சக்கரத்தை நகர்த்துவதற்கு நாம் அனைவரும் நமது வலிமையைப் பயன்படுத்தினால், நமது நாட்டிற்கான நமது எதிர்பார்ப்புகளை நாம் அடைய முடியும் என்று ஜி25 அதன் அறிக்கையில் கூறுகிறது.
ஜி25-ன் கூற்று ஏற்புடையதே.மக்கள் தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது.நாட்டின் தலைவிதி மக்கள் கையில்தான் உள்ளது என்பதை யாரும் மறக்கக்கூடாது.மாற்றம் வேண்டுமென்றால் மக்கள்தான் முடிவெடுக்கவேண்டும்.
வெற்றி பெறுவதற்கான எல்லா வேலைகளையும் நஜிப் செய்துவிட்டார்! ஒன்றுமே செய்யாமல் வெற்றி பெறுவது என்றால் அப்புறம் ஓட்டுப் போட்டு என்ன பயன்!