கடந்த வாரம், காணாமல்போன பாதிரியார் ரேய்மண்ட் கோ மீதான விசாரணையை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்த சுஹாகாம் காணமல்போன மற்ற சமூக ஆர்வலர்கள்மீதான விசாரணையை இன்று காலை மீண்டும் தொடங்கியது.
காலை மணி 11.30க்குத் தொடங்கிய சுஹாகாம் விசாரணை பெர்லிஸ் ஹோப் என்ற அமைப்பைத் தோற்றுவித்த அம்ரி ச்சே மாட் மீது கவனம் செலுத்தியது. அம்ரி 2016 நவம்பர் 26-இல் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவரை யாரும் காணவில்லை.
அம்ரியின் மனைவி முதல் சாட்சியாக சாட்சியமளித்தார்.
விசாரணைக்கு சுஹாகாம் ஆணையர் மா வெங் குவய் தலைமை தாங்குகிறார். அவருடன் ஆணையர்கள் ஆயிஷா பிடினும் நிக் சலிடா சுஹாய்லா நிக் சாலேயும் விசாரணை செய்கிறார்கள்.
சுஹாகாம் பாதிரியார் கோ, பாதிரியார் ஜோசுவா ஹில்மி அவரின் துணைவியார் ரூத் சிதிபு ஆகியோர் காணமல்போனது பற்றியும் விசாரணை நடத்தி வந்தது.
கோ-மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது போலீசார் உபர் காரோட்டுநர் லாம் சாங் நாம்,31, என்பவரை நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்தான் பாதிரியாரைக் கடத்தியவர் எனக் குற்றஞ்சாட்டினர்.
இதனால், சுஹாகாம் பாதிரியார் கடத்தல்மீதான விசாரணையை நிறுத்திவிட்டு அம்ரின் காணாமல்போன விவகாரம் மீதான விசாரணையைத் தொடங்க வேண்டியதாயிற்று.
நீதிமன்றத்தில் உள்ள வழக்குமீது சுஹாகாம் விசாரணையைத் தொடர முடியாது என்பதால் கோ கடத்தல் விசாரணையை சுஹாகாம் கைவிட்டது. இது பாதிரியார் குடும்பத்துக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. நன்றாக போய்க் கொண்டிருந்த விசாரணை தடைப்படுகிறதே என்ற கவலை அவர்களுக்கு. சுஹாகாம் விசாரணையைக் கெடுப்பதற்காக மேற் கொள்ளப்படும் முயற்சியா இது என்றவர்கள் திகைத்து நிற்கிறார்கள்.