சிலாங்கூர் மக்களுக்கு  மற்றுமொரு பரிவுமிக்கத் திட்டம்

 

 

சிலாங்கூர் மாநில அரசின் பரிவுமிக்க கொள்கையின் ஒரு பகுதியாக இம்மாநிலத்தில் ஏழைகளை அடையாளம் கண்டு உதவும் நோக்கில் பற்பல திட்டங்களை வகுத்து அது செயல் படுத்தி வருகிறது. அதில் இந்தியர்கள் கலந்துகொண்டு பயன் அடைவதை வரவேற்கிறோம் என்கிறார் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும் கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

மாத வருமானமாக RM 3000 வெள்ளிக்கு குறைவாக கொண்டுள்ள சுமார் 2.5 இலட்சம் மக்களுக்கு மருத்துவ உதவித் திட்டத்தை கடந்த ஆண்டு ஏற்படுத்திய சிலாங்கூர் அரசு, மக்களின் தேவைக்கு ஏற்ப அச்சேவையின் பயனீட்டாளர்களின் எண்ணிக்கையை 10 இலட்சமாக அதிகரித்தது.

 

கடும் வறுமையில் வாடும் சுமார் 30 ஆயிரம் மாதர்களை அடையாளம் கண்டு உதவும் கிஸ் திட்டத்திற்கு 7 கோடி வெள்ளிகளுக்கு மேல் 2018ம் ஆண்டுக்கு ஒதுக்கி அமல்படுத்தி வருகிறது. இதன் நோக்கம்  பள்ளி செல்லும் குழந்தைகளைக் கொண்டுள்ள வருமானம் குறைந்த குடும்பத்தினருக்கு, குறிப்பாகத் தனித்துவாழும் தாய்மார்களுக்கு, உதவி வழங்குவதாகும் என்று சேவியர் கூறினார்.

 

இத்திட்டத்தின் வழி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் சுமார் 500 ஏழைக் குடும்பங்களை அடையாளம் கண்டு உதவுவது அதன் நோக்கம். அதற்கான பாரங்கள் மற்றும் பதிவினை 2017ம் ஆண்டு இறுதியில் மாநிலம் முழுவதிலுமுள்ள மாநில அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் வழி மேற்கொள்ளப்பட்டன.

 

மாநிலம் முழுவதிலுமிருந்து கிடைக்கப் பெற்ற மனுபாரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் 200 வெள்ளிக்குக்  குடும்ப உணவு, உதவி பொருட்களை வாங்க உதவியாகக் கார்டுகள் விநியோகிக்கப்படும் என்கிறார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

முதல் கட்டமாகக் இவ்வாரம் கோலசிலாங்கூரில் நடைபெற்ற கார்டுகள் விநியோக நிகழ்ச்சியில்  தேர்வுபெற்ற ஒரு சிலருடன் டாக்டர் சேவியர் ஜெயக்குமாருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

 

படத்தில்: அலமேலு கோவிந்தராஜூ, தாமான் ராஜமூசா கோலசிலாங்கூர், தேவி சுப்பையா, லாடாங் புக்கிட் தாலாங் கம்போங் பாரு, துலகி சுப்ரமணியம், லாடாங் புக்கிட் தாலாங், கம்போங் பாரு, சுபாணி ஜோசப், லாடாங் சுங்கை திங்கி, கோலசிலாங்கூர் ஆகியோர் காணப்படுகிறார்கள்.