மலேசியாவில் மனித உரிமைகளை மேன்மைபடுத்துவதற்கான ஈடுபாட்டை அரசாங்கம் கொண்டிருந்ததே இல்லை, ஏனென்றால் நாட்டிலுள்ள தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் உரிமைகளைக்கூட அதனால் தற்காக்க முடியவில்லை என்று ஒரு பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.
எதிர்வரும் மார்ச் மாதத்தில் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்படவிருக்கும் தேசிய மனித உரிமைகள் செயல் திட்டம் (என்எச்ஆர்எபி) தோல்வியில் முடியும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறிய அலோர் செதார் நாடாளுமன்ற உறுப்பினர் கூய் ஹிசியாவ், அதற்கான காரணம் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒருதலைப்பட்சமான மத மாற்றம் பற்றி விவாதிக்க தாம் தாக்கல் செய்திருந்த தனிப்பட்ட உறுப்பினர் மசோதா நிராகரிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
ஒரு தனிப்பட்ட உறுப்பினரின் மசோதா முழுமையாக ஒரு தவறான அடிப்படையின் கீழ் நிராகரிக்கப்பட்டதால் தாம் திகைத்துப்போனதாக கூய் கூறுகிறார். கூய் தாக்கல் செய்திருந்த மசோதா இஸ்லாம் தொடர்புடைய விவகாரங்களைக் கொண்டிருப்பதால், அது தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவதற்கு முன்பு பெடரேசனிலுள்ள இதர மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தி அவற்றின் இணக்கத்தைப் பெற வேண்டியுள்ளது என்று காரணம் கூறப்பட்டதாக கூய் கூறுகிறார்.
நாடாளுமன்றத்தில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், நாட்டிலுள்ள குழந்தைகள் ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்யப்படும் பிரச்சனை தீர்க்கப்படுவதற்கு பேருதவியாக இருந்திருக்கும் என்றாரவர்.
தாய்மார்கள் மற்றும் பெண்கள் ஆகியோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாடும் திண்மையும் அரசாங்கத்திடம் இல்லாதபோது, அறிவிக்கப்படவிருக்கும் என்எச்ஆர்எபி திட்டத்தில் நாம் என்ன உரிமைகளை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க முடியும் என்ற கேள்வியை கூய் எழுப்புகிறார்.
கடந்த ஆண்டு செப்டெம்பரில், ஒருதலைப்பட்சமான மத மாற்றத்தை முடிவிற்கு கொண்டுவர அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில்-இரண்டு பெரும்பான்மை இருக்க வேண்டும். அதற்கான அதிகாரத்தை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெண்கள் பாரிசான் நேசனலுக்கு கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில், இதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு, அரசமைப்புச் சட்டம் பிரிவு 12(4)க்கான திருத்தத்திற்கான, கூய் தனிப்பட்ட உறுப்பினர் மசோதாவை தாக்கல் செய்திருந்தார். அந்த மசோதா நிராகரிக்கப்பட்டது.
ஆகவே, விரைவில் வெளியிடப்படவிருக்கும் என்எச்ஆர்எபி திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கூய் ஒரு “செத்துப்பிறந்த” திட்டம் என்று பெயரிட்டுள்ளார்.
இத்திட்டத்தை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு சுஹாகாம் (மனித உரிமைகள் கழகம்) முன்மொழிந்து, மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளது என்பதை கூய் சுட்டிக் காட்டினார்.
இது குறித்து இதுவரையில் அக்கறை காட்டாத அரசாங்கம் இப்போது என்எச்ஆர்எபி திட்டத்தை அறிவிக்கப் போவதற்கான ஒரே காரணம், இவ்வாண்டில் மலேசியாவின் மனித உரிமைகள் ஆவணம் ஐநாவின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருக்கிறது என்று கூய் மேலும் கூறினார்.