ஒருதலைப்பட்ச மதமாற்றம்: ‘அமைச்சரவை செய்ய அஞ்சியதை நீதிமன்றம் செய்தது’

ஒருதலைப்பட்ச  மதமாற்ற  வழக்கில்  கூட்டரசு    நீதிமன்றம்  அளித்த    தீர்ப்பை    அருமையான   தீர்ப்பு    என்று  பாராட்டிய   ஈப்போ   பாராட்    எம்பி   எம்.குலசேகரன்,  நாடாளுமன்றம்    செய்யாத  ஒன்றை   நீதிமன்றம்   செய்துள்ளது   என்றார்.

ஒன்பதாண்டுப்  “போராட்ட”த்துக்குப்   பின்னர்,   ஒருதலைப்பட்ச   மதமாற்ற  சர்ச்சைக்குத்   தீர்வுகாண  நீதிமன்றம்தான்   முன்வந்துள்ளது  என  குலசேகரன்  கூறினார்.

உச்ச   நீதிமன்றம்  இன்று   காலை    வழங்கிய    தீர்ப்பில்,   குழந்தைகளின்  மதமாற்றத்துக்குப்   பெற்றோர்   இருவரின்  ஒப்புதலும்   தேவை    என்று  கூறியதன்வழி,   நீண்டகாலமாக    இந்திரா   காந்திக்கும்   அவரின்   மதமாறிய   கணவர்   ரிதுவான்   அப்துல்லாவுக்குமிடையில்  அவர்களின்  பிள்ளைகள்  மதமாற்றம்    செய்யப்பட்டது    தொடர்பில்   நடந்துவரும்   வழக்குக்கு    ஒரு  முடிவைக்   கொண்டு   வந்துள்ளது.

“ஆகக்  கூடி     நாட்டின்  தேர்ந்தெடுக்கப்பட்ட    பிரதிநிதிகள்   செய்யத்   தவறிய  ஒன்றை   இன்று    கூட்டரசு   நீதிமன்றம்    செய்துள்ளது.  நஜிப்  சட்டத்தைத்   திருத்தப்போவதாக   வாக்குறுதி   அளித்தார்.  பிறகு  அதற்கு   நாடாளுமன்றத்தில்   மூன்றில்  இரண்டு  பங்கு   பெரும்பான்மை   தேவை  என்று  கூறி   நின்று  விட்டார்”,  என்றார்.

யார்  நஜிப்பிடம்  மூன்றில்  இரண்டு  பங்கு   பெரும்பான்மை    வேண்டும்   என்று   ஆலோசனை   கூறினார்கள்   என்று     தெரியவில்லை  என்று  கூறிய  குலசேகரன்,  அது   ஒரு  அரசியல்   தந்திரம்    என்றார்.  அந்த   விவகாரத்தில்     நஜிப்  மலாய்க்காரர்களிடம்  ஒன்றையும்    மலாய்க்காரர்- அல்லாதாரிடம்  வேறொன்றையும்   கூறி  வந்தார்   நஜிப்   என்றாரவர்.