ஹாடி: ‘மறுசுழற்சி’ வேட்பாளரிடமிருந்து, பாஸ் மக்களைக் காப்பாற்ற வேண்டும்

மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை பாஸ்சுக்கு உண்டு, குறிப்பாக ‘மறுசுழற்சி’ வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும், ‘எளிதில் மறந்துபோகும் மலாய்க்காரர்’களை என்று அப்துல் ஹாடி அவாங் கூறினார்.

சமூக ஊடகங்களின் செல்வாக்கு, இஸ்லாமிற்கு எதிரானக் கூலிப்படையினரை உருவாக்கும் என்று அந்தப் பாஸ் தலைவர் கவலை தெரிவித்தார்.

“பாஸ் இஸ்லாமிய போதனைகளுக்கு இணையான ஜனநாயகத்தைத் தொடர்ந்து தேர்வு செய்யும், அறியாமை மற்றும் முட்டாள்தனமான அரசியலால் மக்களை ஏமாற்றுகின்ற ஜனநாயகம் அல்ல.

“முஸ்லிம்கள் மற்றும் முஸ்லீம் அல்லாத குடிமக்களிடையே, அமைதியான அரசியல் கலாச்சாரத்தைப் பிளவுகள் ஏதும் இல்லாமல் அறிமுகப்படுத்த வேண்டிய கடமை பாஸ்சுக்கு உண்டு.

குறிப்பிட்டு யாரையும் பெயரிடவில்லை என்றாலும், கடந்த ஜனவரி 7-ம் தேதி, எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, பக்காத்தான் ஹராப்பான்ன் தலைவர், துன் டாக்டர் மகாதிரைத்தான் அவர் குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது.

சில பாரிசான் நேசனல் தலைவர்களும் டாக்டர் மகாதிரை மறுசுழற்சி வேட்பாளர் என விவரித்திருக்கிறார்கள்.

1990-களின் பிற்பகுதியில், டாக்டர் மகாதிர் தலைமையின் கீழ், அம்னோ இளைஞர் பிரிவு தலைவராக இருந்த அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, அந்த முன்னாள் பிரதமர் தனது தவற்றை மீண்டும் செய்வார் என்று கூறியுள்ளார்.

“பாஸ் நீண்ட காலமாக, பொறுமையாக இருக்கிறது, மெதுவாக ஆனால் பாதுகாப்பாக அது செயல்படும்,” என்றார் ஹாடி.

கடந்த ஜனவரி 21-ல், பாஸ் குறைந்தது 130 நாடாளுமன்ற இடங்களில் போட்டியிடும் என்றும், 14-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க, மற்ற கட்சிகளுடன் கூட்டு சேறும் வாய்ப்பு உள்ளதாகவும் ஹாடி கூறியிருந்தார்.

“பாஸ் அரசாங்கத்தை அமைக்க விரும்புகிறது, இன்னும் ஒரு பலவீனமான, எதிர்க்கட்சியாக இருக்க விரும்பம் இல்லை,” என்று அவர் ஒரு வாரத்திற்கு முன்பு கூறியது குறிப்பிடத்தக்கது.