தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) தேர்தல் முறைமையை மேம்படுத்தி உள்ளதால், மோசடிக்கு வாய்ப்பில்லை என்று பிரதமர் நஜிப் கூறியுள்ளார்.
டாக்டர் மகாதீர் காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது தேர்தல் முறைமை மிகவும் வெளிப்படையாக உள்ளது என்று அவர் கூறினார்.
முன்னதாக, சமீபத்தில் தலைநகரில் 16 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் டாக்டர் மகாதிர் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் இடையே நடந்த ஒரு சந்திப்பு பற்றி கருத்து தெரிவிக்கச் சொல்லி நஜிப் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலைக் கண்காணிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தை கேட்டுக்கொள்ளவே அச்சந்திப்பு நடந்ததாக தெரிகிறது.
“இது அசாதாரணமானது என்று நாங்கள் நினைக்கவில்லை; ஆனால் வித்தியாசமான ஒன்று, ஏனென்றால் கடந்த 22 ஆண்டுகளாக டாக்டர் மகாதீரை பிரதமராக வைத்திருந்த தேர்தல் முறைமையைதான் எஸ்.பி.ஆர். இதுவரை கடைபிடித்து வருகிறது.
“அதுமட்டுமின்றி, தற்போதைய எங்கள் அமைப்பு முறைமை, இன்னும் வெளிப்படையானதாக ஆகிவிட்டது. தற்போது வாக்குப்பதிவு முகவர், கணக்காளர் மட்டுமின்றி; நாம் நிரந்தர மை முறையையும் கடைப்பிடிக்கிறோம், எனவே ஏமாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை என்று, உறுதியாகக் கூற முடியும்,” என்று அவர் கூறினார்.
இன்று, புத்ரா உலக வாணிப மையத்தில், அம்னோ உச்சநிலை உறுப்பினர் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் நஜிப் இவ்வாறு பேசினார்.
கடந்த 22 ஆண்டுகளாக, எதிர்க்கட்சியினர் ஏன் தேர்தல் முறைமை குறித்து கேள்வி எழுப்பவில்லை என்றும் நஜிப் கேட்டார்.