14-வது பொதுத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்க, பிரதமர் நஜிப் ஓர் உத்வேகத் தீப்பொறிக்காகக் காத்திருக்கிறார்.
“நான் காத்திருக்கிறேன், எனக்குத் தெரியவில்லை (ஜிஇ எப்போது என்று). காத்திருக்கிறேன், ஓர் உத்வேகம் அல்லது ஒரு தீப்பொறி அல்லது ஒரு சரியான நேரம் வரும்வரை.
“எப்போதும் போல அரசியலமைப்பை நாம் பின்பற்றுவதால், ஜூன் வரை காத்திருக்கலாம், அல்லது அதற்கு முன்னதாக நாடாளுமன்றம் தானாக கலையலாம். நாம் சூழ்நிலையைப் பார்ப்போம்,” என்று நஜிப் இன்று, புத்ரா உலக வாணிப மையத்தில் கூறினார்.
நாட்டின் பொருளாதாரச் சூழ்நிலையில், தாம் திருப்தி அடைந்துள்ளதாக நஜிப் கூறியதைத் தொடர்ந்து, ஜிஇ14 எப்போது என்று கேட்டபோது, நஜிப் இவ்வாறு கூறினார்.
இன்று ஓர் ஊடக மாநாட்டில், ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்துள்ளது என்றும், மூன்று ஆண்டுகளில் பங்குச் சந்தையில் மிக உயர்ந்த அளவில் இருக்கிறது என்றும் பிரதமர் நஜிப் தெரிவித்தார்.
மேலும், பணவீக்க விகிதம் குறைவாக உள்ளதாகவும், வேலையில்லாமை 4 விழுக்காடாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அம்னோ மற்றும் பி.என். செயல்திட்டங்களில் அவர் திருப்தி அடைந்துள்ளதாகக் கூறிய வேளை, எதிர்க்கட்சியினர் செல்வாக்கற்று இருப்பதாகவும் அவர் கிண்டலாகச் சொன்னார்.
“கடந்த இரண்டொரு நாள் சம்பவங்களைப் பார்க்கும் போது, அவர்கள் உட்கட்சி விவகாரங்களில் பலவீனமாக இருக்கின்றனர். இது மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்காது,” என்றார் நஜிப்.