பேராக்கில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் தங்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என பிகேஆரும் பெர்சத்துவும் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கு மத்திய தலைமைதான் தீர்வு காண வேண்டும் என பேராக் பக்கத்தான் ஹரபான் கேட்டுக்கொண்டிருக்கிறது.
லூமுட் நாடாளுமன்றத் தொகுதியின்கீழ் வரும் பங்கோர், கம்பார் நாடாளுமன்றத் தொகுதியில் இடம்பெற்றுள்ள துவாலாங் சேகா ஆகியவையே அவ்விரண்டு இடங்களுமாகும்.
“இரண்டு கட்சிகளும் பங்கோரில் போட்டியிடுவதை விரும்புகின்றன. பிகேஆர் நடப்பு லூமுட் எம்பி முகம்மட் இம்ரான் அப்ட் ஹமிட்டை அங்கு களமிறங்க எண்ணி இருந்தது”, என ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.
ஆனால், மாதத் தொடக்கத்தில் நடந்த இட ஒதுக்கீட்டுப் பேச்சுகளில் அத்தொகுதி அமனாவுக்கு ஒதுக்கப்பட்டதால் இப்போது பணி ஒய்வுபெற்ற முன்னாள் கடல்படைத் தளபதியை வோறோரு இடத்தில்தான் களமிறக்க வேண்டும். அதேவேளை, பங்கோரில் களமிறக்க பெர்சத்துவும் பொருத்தமான ஒருவரைக் கைவசம் வைத்திருப்பதாக அவ்வட்டாரம் கூறிற்று.
துவாலாங் சேகாவைப் பொருத்தவரை பிகேஆர் அதன் பேராக் இளைஞர் தலைவரை அங்கு வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
“பெர்சத்து அங்கு (துவாலாங் சேகாவில்) போட்டியிட அதனிடமும் ஒரு நல்ல வேட்பாளர் இருப்பதாகக் கூறிக்கொள்கிறது”, என அந்த வட்டாரம் மேலும் கூறியது.
இதனிடையே, பேராக்கில் டிஏபி 2013-இல் போட்டியிட்ட 18 இடங்களும் மீண்டும் அதற்கே ஒதுக்கப்பட்டிருப்பதாக இன்னொரு வட்டாரம் உறுதிப்படுத்தியது.
பிகேஆருக்கு 15 இடங்கள். 2013-இல் அதற்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
பெர்சத்து, அமனா ஆகிய இரண்டுக்கும் தலா 12 இடங்கள். இரண்டு இடங்கள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படாதிருக்கிறது.