இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், இந்த நாட்டில் இந்திய சமூகத்தை முன்னேற்றவும் பாரிசான் நேஷனல் (பிஎன்) அரசாங்கம் முன்னெடுக்கும் பிரதான செயற்பாடுகள் ஒரு தொடர்ச்சியான முயற்சியாகும்.
அதனை இரண்டு நாட்களுக்குள் அடைந்துவிட முடியாது என்று பிரதமர் நஜிப் கூறினார். காரணம், அது வெளி வளர்ச்சியை மட்டும் சார்ந்தது அல்ல; மாறாக மக்களின் வாழ்க்கை கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
“இந்திய சமூகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த, அவர்களின் மனப்பான்மையையும் மதிப்பையும் மாற்ற வேண்டும், அது ஒரு தொடர்ச்சியான முயற்சியாகும். இந்தியர்கள் தங்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தினால், முன்னோக்கி நகர முடியும் என்று பேசிய ம.இ.கா. தலைவர் டாக்டர் எஸ். சுப்பிரமணியத்தின் கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.
“நாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்தான் இவைதான், ஆனால் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. பி.என். அரசாங்கம் உறுதியளித்த அனைத்தையும் உங்களுக்குச் சிறந்த முறையில் வழங்குவதற்கு உங்கள் ஆதரவு மற்றும் நம்பிக்கை எங்களுக்குத் தேவை.
“நாங்கள் பேசுவது அர்த்தமற்றது அல்ல, அல்லது தமிழில் சொல்வதுபோல் ‘வெட்டிப் பேச்சு’ அல்ல, இது ‘நிஜம்’. பிஎன் அரசாங்கம் அனைத்து மலேசியர்களுக்கும் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றும் … இது பிஎன் அரசாங்கத்தின் உத்தரவாதமாகும்,” என்று ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூசக் கொண்டாட்டத்தில், கலந்துகொண்ட நஜிப் கூறினார்.
இந்தியச் சமூகத்திற்கான சமூக-பொருளாதாரச் சிறப்புத் திட்டங்கள்
சமூகப் பொருளாதார அபிவிருத்தி பிரிவு (செட்டிக்) தலைமையிலான இந்தியச் சமூக-பொருளாதார அபிவிருத்தி திட்டங்களுக்காக RM50 மில்லியன் , பொருளாதார வர்த்தக குழு நிதியம் (தெக்குன்) வணிக- பொருளாதார கடன் நிதிக்காக RM50 மில்லியன், தமிழ்ப்பள்ளிகள் பராமரிப்பு பணி மற்றும் பழுதுபார்ப்பதற்காக RM50 மில்லியன் என பல ஒதுக்கீடுகளையும் நஜிப் அறிவித்தார்.
கூடுதலாக, அரசாங்கம் பெர்மோடாலான் நேசனல் பெர்ஹாட் (பி.என்.பி.) உடன் இணைந்து, ஒரு புதிய முயற்சியையும் அறிவித்துள்ளது. அமானா சஹாம் 1மலேசியாவில் RM1.5 பில்லியன் கூடுதல் யூனிட்டுகளை, முதலீட்டாளருக்கு 30,000 யூனிட்டுகள் என வரையறுக்கப்பட்டு, இந்தியர்களுக்குச் சிறப்பாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“பிப்ரவரியில், பி40 குடும்பங்களுக்கு ஒரு சிறப்பு முதலீட்டு திட்டத்தை நான் துவங்க உள்ளேன். அதன்வழி, 100,000 பி40 இந்தியக் குடும்பங்கள், குறிப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களின் சேமிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது,” என்றார் அவர்.
மேலும் நஜிப், “இந்தியச் சமூகம் குழந்தைகளுக்குத் தரமான கல்வி, பொருளாதார வாய்ப்புகள், குடியுரிமை பிரச்சனைகள் மற்றும் இன்னும் பலவற்றிற்கான தேவைகள் உள்ளது என்பதை நான் புரிந்து கொண்டேன்,” என்றார்.
“அதனால்தான், மதச் சுதந்திரம் மற்றும் பிற மதங்களுக்கான மரியாதைக்குரிய உரிமையை நான் உறுதிப்படுத்து உள்ளேன். குறிப்பாக, இந்தியர்கள் பி.என். அரசாங்கத்தால் காப்பாற்றப்படுவார்கள்,” என அவர் கூறியதை, தைப்பூச விழாவில் கலந்து கொண்ட சுமார் 5,000 பேர் கைத்தட்டி பாராட்டினார்.