பெர்சத்துவை இளைஞர்கள் ஆதரிக்கிறார்கள் ஆனால் மகளிர் ஆதரவு இல்லை

பெர்சத்து    கட்சி   மலாய்  இளைஞர்களின்   வரவேற்பைப்   பெறுவதில்    வெற்றி    கண்டுள்ளது   ஆனால்,    பெண்களின்   ஆதரவைப்  பெறத்தான்   தட்டுத்  தடுமாறிக்  கொண்டிருக்கிறது    என்கிறார்   அரசியல்   ஆய்வாளர்   வான்  சைபுல்  வான்  ஜான்.

அக்கட்சியின்    200,000   உறுப்பினர்களில்   55  விழுக்காட்டினர்   35  வயதுக்கும்   குறைவானவார்கள்    என   வான்  சைபுல்    சிங்கப்பூர்  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸில்    கட்டுரை   ஒன்றில்   குறிப்பிட்டிருந்தார்.

“நான்  பேட்டி  கண்ட   இளம்  பெர்சத்து  உறுப்பினர்களில்  கிட்டத்தட்ட   அனைவருமே    டாக்டர்  மகாதிருக்காகவே   அக்கட்சியில்   சேர்ந்ததாக   தெரிவித்தனர்”,  என  ஜனநாயக,   பொருளாதார  விவகாரக்  கழகம்   என்ற  சிந்தனைக்  குழுவையும்   நடத்தி   வரும்  வான்  சைபுல்   எழுதியுள்ளார்.

இந்த  இளைஞர்கள்  1980களில்   பிறந்தவர்கள்.  அது   மகாதிர்  பிரதமராக  இருந்த  காலம்   என்றாரவர்.

“அப்போது  மகாதிருக்கு   எதிராகக்  கூறப்பட்ட   குற்றச்சாட்டுகளைப்  புரிந்துகொள்ளும்  வயது   அவர்களுக்கு  இல்லை.  ஆனால்,  நாட்டில்  ஒவ்வொரு   நாளும்  புத்தம்புது   கட்டமைப்புகள்   உருவாகி  வருவதைக்  கண்டவர்கள்  அவர்கள்.

“அதனால்  அவர்களுக்கு  மகாதிர்தான்  ஹிரோ”,  என்று  வான்  சைபுல்  கூறினார்.

“ஆனால்  மலாய்  மகளிரைப்   பொருத்தவரை     அவர்கள்  அம்னோவைத்தான்  ஆதரிப்பார்கள்   என்று   தோன்றுகிறது. இதுவரை   நடந்துள்ள   ஆய்வுகள்   அதைத்தான்   காண்பிக்கின்றன.

“கடந்த  ஆண்டு  ஜோகூரில்   ஐசியஸ்- யூசுப்  இஷாக்    கழகம்   மேற்கொண்ட   ஆய்வில்  இது   தெளிவாக   தெரிந்தது.

“மகளிர்  வாக்காளர்களில்    17 விழுக்காட்டினர்  மட்டுமே  பெர்சத்துவை  ஆதரிப்பதாகச்  சொன்னார்கள்.  44  விழுக்காட்டினர்   அதை  அடியோடு புறக்கணித்தார்கள். 39  விழுக்காட்டினர்  யாரை   ஆதரிப்பது   என்ற   தடுமாற்றத்தில்   இருந்தனர்”,  என்றாரவர்.