இந்திரா: மகள் முஸ்லிமாகவே இருக்கட்டும், என்னிடம் திரும்பி வந்தால் போதும்

கூட்டரசு  நீதிமன்றம்  குழந்தைகள்   ஒருதலைப்பட்ச  மதமாற்றம்  செல்லாது  என்று  தீர்ப்பளித்திருந்தாலும்    தன்  மகள்   பிரசன்னா  திக்‌ஷா  விரும்பினால்  அவர்   முஸ்லிமாகவே  இருப்பதில்   தனக்கு   மறுப்பு  இல்லை   என   எம்.இந்திரா  காந்தி   கூறினார்.

“என்  பிரசன்னா   எந்த  மதத்தில்   இருக்க   விரும்பினாலும்   எனக்குக்  கவலை  இல்லை.  அவள்  விரும்பினால்   முஸ்லிமாகவே   இருக்கலாம்.

“நான்  விரும்புவதெல்லாம்   அவள்  திரும்ப   என்னிடமே   வர   வேண்டும்.  இப்போது   எப்படி   இருப்பாள்   என்பதுகூட    தெரியாது.  அவள்  குழந்தையாக  இருந்தபோது   பார்த்தது.

“எனக்குத்   தெரியாமலேயே  என்னிடமிருந்து  எடுத்துச்  செல்லப்பட்டாள்.  அது  தாயான   எனக்கு   நடந்த  பெரிய   அநியாயமல்லவா?

“சமயம்  அவள்   விருப்பத்தைப்   பொருத்தது. அதில்  நான்  தலையிட  மாட்டேன், கட்டாயப்படுத்த   மாட்டேன்.  எனக்கு   என்  குழந்தை   வேண்டும்,  அவ்வளவுதான். தயை    செய்து   சமயத்தைக்  காரணம்  காட்டி  எங்களைப்   பிரித்து  விடாதீர்கள்”,  என்று   இந்திரா  காந்தி  கூறியதாக   மலாய்   மெயில்  ஆன்லைன்   அறிவித்திருந்தது.

ஒன்பதாண்டுகளுக்குமுன்   பிரசன்னாவைக்  கடத்திச்   சென்ற   இந்திரா   காந்தியின்  முன்னாள்  கணவர்    முகம்மட்  ரிதுவான்   அப்துல்லாவைத்   தேடுவதை  போலீஸ்   நிறுத்திக்கொள்ள     வேண்டும்   என   மலேசிய   முஸ்லிம்   அறிஞர்   சங்கம் (பியுஎம்)  கோரிக்கை  விடுத்துள்ளதற்கு    எதிர்வினையாக    இந்திரா   அவ்வாறு   கூறினார்.