ஐ-போன் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட மாணவி வசந்தப்பிரியா மரணம்

ஆசிரியரின் கைத் தொலைபேசியைத் திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட எம்.வசந்தப்பிரியா, இன்று அதிகாலை உயிர் இழந்தார்.

பினாங்கு, செப்ராங் பிறை மருத்துவமனையில், எம்.வசந்தபிரியாவின் உடலைப் பார்த்தபின்னர், மலேசியத் தமிழர் குரல் இயக்கத்தின் தலைவர் டேவிட் மார்ஷல் பாக்கியநாதன், “இறந்தவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்,” என தனது முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.

“இனி, மலேசியாவில் எந்தப் பள்ளி மாணவருக்கும் இதுபோன்று நடக்கக்கூடாது. பிரச்சனைகளுக்குத் தற்கொலை ஒரு தீர்வல்ல என்று அனைத்து மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். பிரச்சினைகளைச் சரியான நபர்களுடன் பகிர்ந்துகொண்டால், நம்மால் அதனைத் தீர்க்க முடியும்.

“இன்று நாம் பல காரணங்களால் வசந்தபிரியாவை இழந்துள்ளோம். அவற்றில் ஒன்று, அப்பள்ளி வழக்கமான இயங்கு நடைமுறையைக் (எஸ்.ஓ.பி.) கடைப்பிடிக்கவில்லை,” என்றும் அவர் கூறினார்.

நேற்று இரவு 7.30 மணியளவில், வசந்த்பிரியாவின் இரத்த அழுத்தம் பலவீனமடையத் தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை 3.00 மணியளவில், அது மோசமடைந்து, வசந்தபிரியா தனது இறுதி மூச்சை விட்டுள்ளார்.

நிபோங் தெபால், மெத்தடிஸ் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த வசந்தப்பிரியா, ஆசிரியர் ஒருவரின் ‘ஐ-போன் 6’ திருடுபோன சம்பவத்தில், அப்பள்ளி ஆசிரியர்கள் மூவரால் குற்றம் சாட்டப்பட்டதோடு; சுமார் 5 மணி நேரம் அலுவலக அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டிய ஆசிரியரோடு, இரவு வீடு திரும்பிய வசந்தபிரியா, அந்தக் கைத் தொலைபேசியைத் தான் திருடவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கில் தொங்கினார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இதற்கிடையே, கல்வி அமைச்சு இவ்வழக்கை விசாரித்து வருவதாகவும், விசாரணை நிறைவடையும் வரை, சம்பந்தப்பட்ட ஆசிரியர், மாவட்டக் கல்வி இலாகாவில் பணிக்கு அமர்த்தப்படுவார் என்றும் துணைக் கல்வி அமைச்சர் பி.கமலநாதன் தெரிவித்தார்.