தன் 14-வயது மகள் எம். வசந்தபிரியா கழுத்தில் துப்பட்டாவை இறுக்கிக் கொண்டு தொங்கியதைக் கண்டதும் அவரின் தந்தை வாய்விட்டுக் கதறினார்.
“என் கதறலை மொத்த கம்பமும் கேட்டிருக்கும்.
“உடனடியாக முதலுதவி செய்துவிட்டு என் தம்பியுடன்
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்” என்று ஆர். முனியாண்டி த ஸ்டார் ஆன்லைனிடம் இன்று தெரிவித்தார்.
அந்தப் பதின்ம வயது மாணவி சுங்கை பக்காப் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து செபறாங் பிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு சில தினங்களாக உயிருக்குப் போராடி நினைவு திரும்பாமலேயே நேற்று அதிகாலை மணி 3.35க்கு இறந்து போனார்.
பள்ளி ஆசிரியை ஒருவரின் ஐ-பேசியைத் திருடிவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அந்த ஆசிரியையால் ஒரு தனி அறையில் வைத்துப் பூட்டப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதை அடுத்து வசந்தபிரியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அன்று மகள் வீடு திரும்பியபோது “முகம் வாடிப் போயிருந்தது”, தான் ஆசிரியையின் கைத்தொலைபேசியை எடுக்கவில்லை என்று அவள் கூறினாள் என முனியாண்டி தெரிவித்தார்.
“கவலைப்படாதே, நான் கவனித்துக் கொள்கிறேன் என ஆறுதல் கூறினேன். அவளின் பாட்டியிடமும் அவள் அதையேதான் சொன்னாள்.
“பிறகு அறைக்குள் சென்று பூட்டிகொண்டாள். கதவைத் திறக்க முடியாதபடி ஒரு சோபாவைக் கதவுக்குப் பின்னே வைத்து விட்டாள். நாங்கள் கதவைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றபோது தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள்”, என்றார்.
வசந்தபிரியா அவரின் குடும்பதாருக்கு ஒரு கடிதமும் வைத்திருந்தார். அதில் அவர் அந்த ஆசிரியையைத் தமக்கு பிடிக்கும் எனவும் அவரின் கைத்தொலைப்பேசியைத் திருடவில்லை எனவும் எழுதியிருந்தாள் என முனியாண்டி கூறினார்.
அவரின் சித்தி ஏ.லலிதா, திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டதை எண்ணி வசந்தபிரியா மிகவும் மனமுடைந்து போயிருந்ததாகக் குறிப்பிட்டார்.
“ஆசிரியைக்கு ஒருவேளை கைத்தொலைப்பேசி திரும்பக் கிடைக்கக்கூடும். ஆனால் என் சகோதரிக்கு அவரின் மகள் திரும்பக் கிடைப்பாளா?”, என்றவர் வினவினார்.
சம்பந்தபட்ட ஆசிரியர் கல்வி இலாக்கா அலுவலகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டாரா?.விசாரணை,பணி நீக்கம், தண்டனை எல்லாம் எப்பொழுது? அப்படியே ஆறப்போட்டு நாளடைவில் மூடி மறைக்கும் திட்டம் ஏதும் உண்டோ?
அரசாங்க ஊழியர் என்ற தலைகணம் நிறைந்த பல ஆசிரியர்களுக்கு விரைவில் பாடம் புகட்டும் நேரம் நெருங்கி விட்டது.இவர்களை போல் பொறுப்பற்ற ஆசிரியர்களால் சமூக அக்கறை மிக்க ஆசிரியர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்ப்படுவது கவலைக்குரியது.அடுத்து என்ன, சம்பந்த பட்ட மாணவியின் பெற்றோரிடம் டீல் பேசும் நடவடிக்கை ஆரம்பமாகும்,பிறகு கமுக்கமாக மூடி மறைக்கும் முயற்சியும் நடைபெறும். தமிழ் சமுகமே ! விழித்திருப்போம் .இல்லையேல் இந்த அவலம் தொடரும்