எல்எப்எல்: பொய்ச் செய்திகளுக்கு எதிரான போராட்டம் வீணானது

சுதந்திரத்துக்காக   போராடும்   வழக்குரைஞர்கள்   அமைப்பு(எல்எப்எல்)       புத்ரா    ஜெயா    பொய்ச்  செய்திகளை  ஒடுக்கும்    சட்டங்களை   வரைய    ஒரு   குழுவை    அமைத்திருப்பது    குறித்து    கவலையுறுகிறது.

“இணையத்தளத்தில்   உண்மை  எது    பொய்  எது   என  முறைப்படுத்த  முயல்வது      வீண்வேலை,   உண்மைக்கு   யாரும்  தனியுரிமை   கொண்டாட  முடியாது”, என   அதன்  செயல்   இயக்குனர்   எரிக்  பால்சன்   ஓர்    அறிக்கையில்    கூறினார்.

அதற்குப்   பதில்   தகவல்   விசயத்தில்   விழிப்புடன்   இருக்குமாறு    அரசாங்கம்   மக்களுக்கு    அறிவுறுத்தலாம்.

இட்டுக்கட்டப்படும்   செய்திகள்  பெருகிவருவது   கவலை  அளிக்கும்   விசயம்தான்   என்பதை   எல்எப்எல்   ஒப்புக்கொள்வதாகக்  கூறிய   பால்சன்,   அதை  ஒடுக்குவதற்கான   முயற்சிகள்   கருத்துச்   சுதந்திரத்தையும்  தகவளிக்கும்   சுதந்திரத்தையும்   பத்திரிகைகளையும்     ஒடுக்குவதாக   அமைந்து  விடக்கூடாது  என்றார்.

“அக்குழு  பொய்யான    செய்தி  என்பதை   எப்படி  வரையறுக்கும்?

“அதிகாரிகள்  பாகுபாடின்றி   நடந்து  கொள்வார்கள்   என்று   எதிர்பார்க்கலாமா   அல்லது   தங்களுக்குச்    சாதகமற்ற   செய்திகளை  எல்லாம்  பொய்ச்  செய்திகள்   என்று   கூறுவார்களா?  அரசாங்கத்தால்    உறுதிப்படுத்தப்பட்டால்  மட்டுமே   ஒரு   செய்தி   ‘உண்மையானது’  என்ற  நிலை   வரப்போகிறதா ?”,  என்றவர்   வினவினார்.