பாரிசான் நேசனல் தலைவர்கள், ஜொகூர் மக்கள் குறிப்பாக கேலாங் பாத்தா நாடாளுமன்ற வாக்காளர்கள், அத்தொகுதியை எதிர்க்கட்சியினரிடம் பறிகொடுத்ததை ஒரு பாடமாக எடுத்துகொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 13-வது பொதுத் தேர்தலில் இருந்து நடந்துகொண்டிருக்கும் அனைத்திற்கும் காரணம் உண்டு; எனவே அனைத்து தரப்பினரும் குறிப்பாக பிஎன் தேர்தல் இயந்திரம் வாக்காளர்களின் இதயத்தைக் கவர பாடுபட வேண்டும் என அம்னோ துணைத் தலைவர், ஹிஷாமுடின் ஹுசேன் கூறினார்.
“நம்மிடம் இருப்பதை எளிதாக எடுத்துகொள்ள வேண்டாம். நான் பிஎன் தேர்தல் இயந்திரத்திற்கு நினைவூட்டுகிறேன், இந்த மண்டபத்தில் இருப்பது நமக்கு போதாது, இந்த மண்டபத்திற்கு வெளியே இருக்கும் வாக்காளர்களைத் தேர்தல் இயந்திரம் அணுக வேண்டும்.
“நமது நோக்கம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும், நமது இயக்கங்கள் வளர்ந்து வரும் வெறுப்பு மற்றும் முரண்பாட்டை நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது,” என்று ஸ்கூடாய்யில் சீனப் புத்தாண்டு வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
13-வது பொதுத் தேர்தல் எளிதான ஒன்றல்ல என்று ஹிஷாமுடின் கூறினார், இருப்பினும், ஜொகூரில் எதிர்க்கட்சி வெற்றிபெற்ற இடங்களை மீண்டும் கைப்பற்ற அது ஒரு சக்தியாக அமையும் என அவர் மேலும் சொன்னார்.
“ (சீனப்) புத்தாண்டு பிறக்கவிருக்கும் இந்நேரத்தில், நமக்கு இரண்டே தேர்வுகள்தான் உள்ளன, ஒன்று மீண்டெழ வேண்டும் அல்லது தோற்க வேண்டும்,” என்றார்.
“இது முற்றுப்புள்ளி இல்லாத ஒரு போராட்டம், ஜொகூர் மக்கள் அனைவரின் ஆதரவும் நமக்குத் தேவை. இதற்கு அரசியல் ஒற்றுமையும் தேவை, இறைவனின் அருளால் நாம் ஒன்றுபட்டு நாட்டை மேம்படுத்துவோம்,” என்று செம்புரோங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
கேலாங் பாத்தா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட, அத்தொகுதியின் மசீச தலைவர் ஜேசன் தியோ சியு ஹோக் சிறந்த வேட்பாளரா எனப் பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, “அதனை மசீச தலைமைத்துவம் தேர்வு செய்ய வேண்டும், பிரதமர் முடிவு செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இதில் முக்கியம் என்னவென்றால், 14-வது பொதுத் தேர்தலில் பிஎன்-ஐ பிரதிநிதித்து போட்டியிடும் வேட்பாளர், மக்கள் விரும்பும் ஒருவராக இருக்க வேண்டும்.