14-வது பொதுத் தேர்தலில், பினாங்கில் பாஸ் போட்டியிடுவது, பாரிசான் நேஷனலுக்கு நன்மையளிக்கும் எனப் பக்காத்தான் ஹராப்பான் துணைத் தலைவர் லிம் குவான் ஏங் கூறினார்.
ஜனநாயக நாட்டில், எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் பாஸ் தனது வேட்பாளரை நிறுத்தலாம், அதற்கு உரிமை உண்டு எனவும் டிஏபி-யின் தலைமைச் செயலாளருமான லிம் கூறினார்.
“ இது ஒரு சவால், பாஸ் போட்டியிடுவது பாரிசானுக்கு நன்மையளிக்கும் என பலர் கருதுகின்றனர், ஆனால் அனைத்தும் மக்களிடம் இருக்கிறது,” என இன்று ஜோர்ஜ் டவுனில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
பாஸ் போட்டியிடுவது பாரிசானுக்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும், எனவே கெராக்கான், மசீச, அம்னோ கட்சியினர் நிச்சயம் மகிழ்ச்சி அடைவர் என்று லிம் கூறினார்.
நேற்றிரவு, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதியில் தனது வேட்பாளரை நிறுத்தப்போவதாக, பாஸ் கட்சியின் தலைவர் ஹடி அவாங் அங்கு நடந்த ஒரு கூட்டத்தில் அறிவித்ததன் தொடர்பில் லிம் இவ்வாறு கருத்துரைத்தார்.
கடந்த 1978-ல், அத்தொகுதியை பாஸ் கைப்பற்றியதையும் ஹடி நினைவு கூர்ந்தார்.
1969 முதல் அங்குப் போட்டியிட்டு வந்த பாஸ், கடந்த 1999 பொதுத் தேர்தலின் போது அத்தொகுதியை பிகேஆரிடம் கொடுத்தது. 1982 முதல், அன்வார் அம்னோ டிக்கெட்டில் அந்நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருந்து வந்தார். 2015-ல், அப்பதவிக்கான தகுதியை அவர் இழந்தபோது, இடைத்தேர்தலில் வான் அசிஷா போட்டியிட்டு வென்றார்.
- பெர்னாமா