கடந்த பிப்ரவரி 3-தேதி, ம.இ.கா. பொருளாளர் எஸ். வேள்பாரி, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ், ஏழை இந்தியர்களுக்கு அமானா சாஹாம் 1 மலேசியா (அ.ச.1ம.) திட்டத்தால் பலனில்லை என்று வெளியிட்ட அறிக்கை அடிப்படையற்றது என்று கூறியிருந்தார்.
அதன் தொடர்பில், டாக்டர் ஜெயக்குமார் ஒரு பத்திரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“கோலாலம்பூர் – பெட்டாலிங் ஜெயாவுக்கு வெளியே, 50% -க்கும் அதிகமான இந்தியக் குடும்பங்கள் RM 3000-க்கும் கீழ், மாதாந்த வருமானம் பெறுகின்றனர் என்பதை வேள்பாரி அறிந்துள்ளாரா,” என்று அந்த அறிக்கை வாயிலாக ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அந்த RM 3000 வருமானத்தில், 70% பெரும்பாலும் வீட்டுக் கடன், பிடிபிடிஎன் கல்விக் கடன், வாகனக் கடன் என இன்னும் பலவற்றிற்கு செலவாகிறது. இதில், இன்னொரு கடனைப் பெற்று, அ.ச.1ம. பங்கு திட்டத்தில் முதலீடு செய்ய அவர்களில் பெரும்பான்மையினருக்கு முடியாத காரியம்,” என்று ஜெயக்குமார் விளக்கப்படுத்தினார்.
அதுமட்டுமின்றி, கஷானா ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, இதுபோன்ற திட்டங்கள் மேல்தட்டு வர்க்கத்திற்குப் பயனளிக்குமே தவிர, ஏழைகளுக்கு உதவாது என்பதனைப் புள்ளி விவரங்கள் வழி ஆதாரமாக வெளியிட்டதையும் ஜெயக்குமார் சுட்டிக்காட்டினார்.
“அமானா சஹாம் பூமிபுத்ரா (எ.எஸ்.பி) போன்ற திட்டங்களால், மலாய்க்காரர்களின் வறுமையை ஒழிக்க முடியாத போது, அமானா சஹாம் 1மலேசிய திட்டம் மட்டும் எப்படி இந்தியர்களின் வறுமையை ஒழிக்கும்,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“ஆக, வேலைக்காகாது என்று நிரூபிக்கப்பட்ட ஒரு திட்டத்தை வேள்பாரி எந்த அடிப்படையில் நம்புகிறார்?” என்றும் அவர் கேட்டார்.
“அதனால்தான் நான் புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு, நிலப்பட்டா வழங்க ஆலோசனை கூறினேன்.
“மலேசிய இந்தியர்களில், வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் 20 விழுக்காட்டினரான இவர்கள், ஒவ்வொரு முறை புதிய மேம்பாட்டுத் திட்டங்கள் வரும்போதும், தங்கள் குடியிருப்புகளில் இருந்து விரட்டி அடிக்கப்படுகின்றனர்.
“ஆக, இவர்களுக்கு அரசாங்கம் நிலப்பட்டா வழங்கினால், அது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
“இத்திட்டத்தை வேள்பாரியும் ம.இ.கா.-வும் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுசென்று, அந்த ஏழை இந்தியர்களும் சொந்த வீடு பெற உதவுவார்களா?
“இந்தத் திட்டம், நம் சமுதாயத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் 20 விழுக்காட்டினருக்கு அர்த்தமுள்ளதாக இருக்கும்,” என்று மலேசிய சோசலிசக் கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினருமான டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதோடுமட்டுமின்றி, குடியுரிமை பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ம.இ.கா. பணியாற்றி வருவதாக வேள்பாரி கூறியது குறித்தும் ஜெயக்குமார் கருத்துரைத்தார்.
“குடியுரிமை பிரச்சனைகளை வேள்பாரி சுயமாக கையாண்டால், இப்பிரச்சனைக்குக் காரணம் பதிவு இலாகா அதிகாரிகள் அல்ல என்பதை அவர் உணர்ந்து கொள்வார். தற்போதையத் தடைகளுக்குக் காரணம், அம்னோ உயர்மட்ட அதிகாரிகளால் விதிக்கப்படும் நிபந்தனைகள்தான்.
“நான் சுமார் 25 பிரச்சனைகளைக் கையாண்டு இருக்கிறேன், இந்தியர்கள் மட்டுமல்ல, சீனர், மலாய்க்காரர்கள் கூட. ‘திருமணத்திற்கு முன்’ (அம்னோ விதியின்படி) என்ற நிபந்தனையைக் காரணம் காட்டி, சிக்கலை ஏற்படுத்துகின்றனர். சுங்கை சிப்புட்டில் மட்டும் 25 குடியுரிமை பிரச்சனைகள் என்றால், நாடு முழுவதிலும்….,” என அவர் கேள்வி எழுப்பினார்.
“ஆக, இப்பிரச்சனையைக் களைய, வேள்பாரி அம்னோ தலைவர்களுடன் கலந்துபேசி, விதிமுறைகளில் தளர்வை ஏற்படுத்த வலியுறுத்த வேண்டும்,” என்றார் அவர்.
“வேள்பாரி மலேசியாவில் உள்ள ஏழை இந்தியர்களுக்கு உண்மையில் உதவி செய்ய விரும்பினால், பிஎன் தலைவர்களிடம் இப்பிரச்சினைகளை எடுத்துச் செல்ல வேண்டும்,” என்று அவர் சொன்னார்.