அல்தான்துயா ஷாரிபு கொலை செய்யப்பட்ட வழக்கில், தனியார் புலன்விசாரணை அதிகாரி பி பாலசுப்ரமணியத்தின் குடும்பம் ஐந்து ஆண்டுகளாக நாடு கடத்தப்பட்டதன் தொடர்பில், அவரின் மனைவி, ஏ.செந்தமிழ்ச்செல்வி, சர்ச்சைக்குரிய கார்பெட் விற்பனையாளர், தீபக் ஜெய்கிஷியனை விசாரிக்க, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று அனுமதி கொடுத்தது.
நீதிமன்றம் வந்த தீபக், எதிர்வரும் மார்ச் 2-ம் தேதி, சாட்சியம் அளிக்கவுள்ளதாக நிருபர்களிடம் தெரிவித்தார், “உண்மையைச் சொல்லி, இறுதியில் நான் விடுதலையாவேன்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“பெடரல் கோர்ட்டு முதல் தற்போது வரை, என்ன நடந்தது என்பதை நான் சொல்வேன், நான் உண்மையைப் பேசுவேன்,” என்று அவர் கூறினார்.
இன்று நீதிபதி ஹூய் சியு கேங் செந்தமிழ்ச்செல்வியின் விண்ணப்பத்திற்கு அனுமதி அளித்தார். முன்னதாக, அந்த விண்ணப்பத்திற்குத் தீபக் ஆட்சேபனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2008-ல், பாலசுப்ரமணியம் அல்தான்துயா கொலை வழக்குத் தொடர்பான விஷயங்களை வெளியிட்டதனால், தனது குடும்பம் நாடு கடத்தப்பட்டது தவறு என செந்தமிழ்ச்செல்வி குற்றஞ்சாட்டினார்.
2012-ல், நஜிப் – அல்தான்துயா ஊழல் வழக்குத் தொடர்பில், பாலசுப்ரமணியம் தனது வாக்குமூலத்தைத் திரும்பப் பெற்றதில், நஜிப்புக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பங்கு உள்ளது என்று தீபக் கூறியிருந்தார்.